திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா? முழு கண்ட்ரோலையும் எடுத்த போலீஸ்! பரபரப்பான மாமதுரை!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மலை முழுவதும் ட்ரோன்கள் பறக்க மதுரை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. நவம்பர் 23, 24 ஆகிய இரண்டு நாட்களும் திருப்பரங்குன்றம் மலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்புப் பணிக்காக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் மதுரையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதால், திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு முருக பக்தர்கள் மற்றும் மதுரை மக்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க மதுரை மாநகர காவல் ஆணையர் தடை விதித்துள்ளார்.
திருப்பரங்குன்றம்
ட்ரோன் விதிகள் 2016-ன் விதி 24ன் கீழ், நவம்பர் 23ஆம் தேதி முதல் நவம்பர் 24-ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சி, கிரிவலப் பாதைகள், திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட இடங்களிலும் ட்ரோன்களை இயக்க அனுமதி இல்லை.
ட்ரோன் பறக்க தடை
இந்த இரண்டு நாட்களிலும் உரிய அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களுக்காக ட்ரோன்களை இயக்க வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். தடையை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பக்தர்கள் செல்லத் தடை
இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலையில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மலை உச்சிக்குச் செல்லும் பாதைகளில் ஒன்றான பழனியாண்டவர் கோவில் வழியாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசாரும் மலைக்குச் செல்லும் பாதையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபத் திருவிழா
மலைப்பாதையில் வெடிகுண்டு தடுப்பு உள்ளிட்ட சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் மலைக்கு மேலே செல்ல முடியாத வகையில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள போலீசார் தொடர்ந்து பழனியாண்டவர் கோவில் வழியாக மலைப்பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றத்தில் நாளை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் குவிப்பு
இவர்கள் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருப்பரங்குன்றம் முழுவதும் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மாலை நேரத்திலும் மலைக்குச் செல்லும் பாதைகளில் போலீசார் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர். மலை அடிவாரம், கிரிவலப் பாதை, கோவில் நுழைவுப் பகுதிகள் என முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
கார்த்திகை தீபம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வெளியாகியுள்ளதால், நாளை அங்கு தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான முன்னேற்பாடுகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
