பாகுபலி மாதிரி நடந்துக்காதீங்க.. நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் விடுத்த வார்னிங்! என்ன தான் நடந்தது?
டெல்லி: வழக்கு ஒன்றில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிட்டதை காவல்துறை கண்காணிப்பாளர் நிறைவேற்றவில்லை என்பதற்காக. அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவித்து அபராதம் விரித்துள்ளார் பீகாரைச் சேர்ந்த நீதிபதி ஒருவர். இந்த நிலையில், "நீதிபதி என்றால் உங்கள் அதிகார வரம்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பாகுபலி மாதிரி நடந்து கொள்ளக் கூடாது" என அந்த நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் சாசரத் கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர் அணில் குமார். அப்போது வழக்கு ஒன்றை விசாரித்த அவர் அந்த வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததாக கூறப்படும் நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், இந்த உத்தரவை காவல் கண்காணிப்பாளர் நிறைவேற்றவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி அணில் குமார் சம்பந்தப்பட்ட எஸ்பி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
மேலும் கடந்த 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி காவல் கண்காணிப்பாளரை நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளியாக அறிவித்ததோடு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒரு ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். மேலும் அந்த தீர்ப்பில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் செயல்பாடுகள் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து சில கருத்துக்களை நீதிபதி தெரிவித்திருக்கிறார். இதனை எதிர்த்து எஸ்பி தரப்பில் பாட்னா உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
ஏற்கனவே எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற நீதிபதியின் உத்தரவு தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில் அவர் தனியாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது குறித்து பாட்னா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு அந்த நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பெற்றது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக செசன்ஸ் நீதிபதி அணில் குமார் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. அதில் பாட்னா உயர் நீதிமன்றம் தனது நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாய்மால்யா பாக்சி சில முக்கியமான கேள்விகளை முன் வைத்தார்.
அதில் நீதிமன்றத்தில் ஒருவரை தாக்குவது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசுவது அல்லது நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டும் வெளியேற மறுப்பது போன்ற செயல்கள் நீதிமன்றத்தின் முன்னிலையில் நடைபெறும் குற்றங்கள். ஆனால், ஒரு வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறை அதிகாரி அதனை செய்யவில்லை என்பதற்காக அதை நீதிமன்றத்தில் முன்னிலையில் நடைபெற்ற குற்றமாக கருத முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மேலும், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 384 மற்றும் பழைய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 345 ஆகியவற்றின் வரம்புகளை முதலில் நீதிபதி புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தைப் பற்றிய உங்களுடைய புரிதலைக் கண்டு நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறோம். முதலில் பிஎன்எஸ்எஸ் பிரிவு 384 மற்றும் சிஆர்பிசி பிரிவு 345 ஆகியவற்றின் வரம்புகளை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
நீதிமன்றத்தில் ஒருவர் மற்றொருவரை அறைந்தாலோ, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசினாலோ, வெளியேறச் சொன்ன பிறகும் வெளியேற மறுத்தாலோ அது நீதிமன்றத்தின் முன்னிலையில் நடைபெறும் குற்றமாகும். ஆனால், எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு நாம் உத்தரவிட்டும் ஒருவர் அதைச் செய்யவில்லை என்றால், அதை நீதிமன்றத்தின் முன்னிலையில் நடைபெற்ற குற்றமாகக் கருத முடியாது என்றார்.
மேலும், காவல் கண்காணிப்பாளரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து, அதே நாளில் அவரைக் குற்றவாளியாக அறிவித்து அபராதம் விதித்ததையும் கேள்விகுள்ளாக்கிய நீதிபதி, "போதும் இந்தச் சாகசங்கள். தேசிய நீதித்துறை அகாடமிக்குச் சென்று பயிற்சி பெறுங்கள். நீதிபதி என்றால் உங்கள் அதிகார வரம்பு என்ன என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பாகுபலி மாதிரி நடந்து கொள்ளக் கூடாது" என்று கடுமையாக கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
