சொந்தத்திற்குள் திருமணம் செய்ய தடையா? உச்சநீதிமன்றம் கேட்ட கேள்வி! மத்திய அரசுக்கு நோட்டீஸ்?
டெல்லி: இந்தியாவில், குறிப்பாகத் தென் மாநிலங்களில் அத்தை மகள், மாமன் மகன் என நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த குடும்பத்திற்குள் திருமணம் செய்யும் முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடும் கேள்விகளை எழுப்பி உள்ளது.
இவ்வாறு நெருங்கிய சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொள்வதால் பிறக்கும் குழந்தைகளுக்குப் பல்வேறு மரபணு ரீதியான உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக உரிய சட்டம் இயற்றுவது குறித்தும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?
பெங்களூரை சேர்ந்த சார்வி எஸ் என்ற சட்டக் கல்லூரி மாணவி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். சார்விக்கு Retinitis Pigmentosa மற்றும் Cone Dystrophy ஆகிய அரிய வகை கண் நோய்கள் உள்ளன. இதன் காரணமாக அவருக்குப் பார்வைத் திறன் படிப்படியாகக் குறைந்து 40 சதவீதப் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
தனது பெற்றோர் நெருங்கிய ரத்த உறவினர்கள் என்றும், அவர்கள் சொந்தத்திற்குள் திருமணம் செய்துகொண்டதாலேயே தனக்கு இந்தப் பிறவி மரபணு குறைபாடு ஏற்பட்டதாகவும் சார்வி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற திருமணங்களால், பிறக்கும் குழந்தைகளுக்குத் தீராத உடல் மற்றும் அறிவுசார் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
எனவே, வருங்காலத் தலைமுறையைப் பாதுகாக்க இத்தகைய திருமணங்களைத் தடுக்கவோ அல்லது திருமணத்திற்கு முன்பு கட்டாய மரபணுப் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கவோ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். ஏற்கனவே நடந்த திருமணங்களைக் குற்றமாக்க வேண்டும் என்பது தனது நோக்கமல்ல, வருங்காலத்தில் இத்தகைய பாதிப்புகளைத் தடுக்கவே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
நீதிபதிகள் கூறிய முக்கிய கருத்துக்கள்
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிராமப்புறங்களில் இந்தப் பழக்கம் அதிகம் இருப்பதாகவும், இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களுக்குப் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும் வாதிட்டார்.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்ய காந்த், இது நம் அனைவருக்கும் நிச்சயமாகக் கவலை அளிக்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயம் என்று கருத்து தெரிவித்தார்.
அதே நேரத்தில், சக நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஒரு முக்கியமான சட்ட நுணுக்கத்தைச் சுட்டிக்காட்டினார்., யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது ஒவ்வொரு தனிநபரின் சொந்த விருப்பம். இதற்கு முன்பு எச்.ஐ.வி பாதிப்புள்ள நபரைத் திருமணம் செய்துகொள்வது தொடர்பான வழக்கில்கூட, அது தனிநபர் உரிமை என்று இந்த நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டுத் திருமணங்களைத் தடுக்க முடியாது; சட்டம் இயற்றுவது நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால், மக்கள் எடுக்கும் முடிவு என்பது முழுமையான விழிப்புணர்வுடன் கூடியதாக இருக்க வேண்டும். என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசுக்கு உத்தரவு
விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் குறித்து மக்களிடையே அறிவியல் பூர்வமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காகப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் உரிய பாடங்களைச் சேர்ப்பது குறித்தும், தேவைப்பட்டால் தகுந்த சட்டம் இயற்றுவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், எனக் கூறி, இது தொடர்பாகப் பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, பாரம்பரிய பழக்கவழக்கங்களுக்கும் நவீன மருத்துவ அறிவியலுக்கும் இடையிலான முக்கிய விவாதத்தை நாடு முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
