சென்னையில் வரப்போகும் மிகப்பெரிய மால்! படுவேகமாக நடக்கும் ‘ஃபோரம் ஒன்’ பணிகள்.. எங்கே தெரியுமா?
சென்னை: சென்னை மாநகரின் ஐடி நிறுவனங்கள் நிறைந்த முக்கியப் பகுதியான பழைய மகாபலிபுரம் சாலையில் மிகப்பிரம்மாண்டமான மால் ஒன்று உருவாகி வருகிறது. ஃபோரம் ஒன் ஓஎம்ஆர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரெஸ்டீஜ் குழுமம் இந்த மெகா திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

சாதாரணமாக ஒரு ஷாப்பிங் மால் என்றால் கடைகள், சினிமா தியேட்டர்கள் மட்டுமே இருக்கும். ஆனால், பெருங்குடி பகுதியில் உருவாகி வரும் இந்த ஃபோரம் ஒன் திட்டம், ஒரு மிக்ஸ்டு டெவலப்மென்ட் எனப்படும் ஒருங்கிணைந்த வளாகமாகக் கட்டப்பட்டு வருகிறது. அதாவது, ஒரே இடத்தில் பிரம்மாண்ட ஷாப்பிங் மால், ஐடி நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல் என மூன்று முக்கிய வசதிகளும் அமையவுள்ளன.
மால், ஆபீஸ், நட்சத்திர ஓட்டல்
பிரெஸ்டீஜ் குழுமம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, 2026-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தத் திட்டத்தின் முக்கியக் கட்டுமானப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டு, தற்போது வேகமெடுத்துள்ளன.
இந்த வளாகத்தின் மிக முக்கியமான பகுதி, சுமார் 13.9 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகும் பிரம்மாண்ட ஷாப்பிங் மால் ஆகும். இது கட்டி முடிக்கப்படும்போது சென்னையின் மிகப்பெரிய மால்களில் ஒன்றாக இருக்கும். இதில் 100-க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்நாட்டு பிராண்ட் கடைகள், பெரிய உணவுக் கூடங்கள் மற்றும் நவீன வசதிகள் கொண்ட மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்கள் அமையவுள்ளன.
ஷாப்பிங் மாலுடன் இணைந்து, 3.1 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன அலுவலக இடங்களும் கட்டப்பட்டு வருகின்றன. ஓஎம்ஆர் சாலையில் புதிய நிறுவனங்கள் தங்கள் கிளைகளைத் தொடங்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுமட்டுமின்றி, உலகப் புகழ்பெற்ற மேரியட் நிறுவனத்தின் 'மக்ஸி என்ற நவீன நட்சத்திர ஓட்டலும் இங்கு உருவாகிறது. சுமார் 3.2 லட்சம் சதுர அடியில், 153 அறைகளுடன் கூடிய இந்த ஓட்டல், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
மெட்ரோ ரயில் இணைப்பும், போக்குவரத்து வசதியும்
பெருங்குடி சந்திப்பிற்கு அருகே, ஒய்எம்சிஏ மைதானத்தை ஒட்டி இந்த வளாகம் அமைந்துள்ளது. இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே போக்குவரத்து வசதிதான். சென்னையில் தற்போது வேகமாக நடந்து வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடத்துடன் இந்த மால் நேரடியாக இணைக்கப்படவுள்ளது. இதனால், எதிர்காலத்தில் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், மெட்ரோ ரயிலில் வந்து இறங்கியவுடன் நேரடியாக மாலுக்குள் செல்ல முடியும்.
எப்போது திறக்கப்படும்?
தற்போது கட்டுமானப் பணிகள் படுவேகமாக நடந்து வருவதால், 2027-ஆம் ஆண்டில் இருந்து இந்த வளாகத்தின் பணிகள் படிப்படியாக நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மெகா திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், லட்சக்கணக்கான ஐடி ஊழியர்களுக்கும் இது ஒரு முக்கியப் பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக மையமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.


Click it and Unblock the Notifications
