நாளை மறுநாள் கார்த்திகை தீபம்! உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவு! தமிழக அரசு தீபம் ஏற்ற அனுமதிக்குமா?
மதுரை: திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு கொடுத்திருக்கிறது. இருப்பினும் இந்த உத்தரவுக்கு தவெகவுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில்.. தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்பது கேள்வியாக எழுந்திருக்கிறது.
நவ.24ம் தேதி, அதாவது நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த ஆண்டும் இதேபோன்ற கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாரிக்கொண்டிருந்தபோதுதான், இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் விஷயத்தை கிளப்பின.

கடந்த 100-150 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில், உச்சி பிள்ளையார் கோயிலில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து அமைப்பை சேர்ந்த ராம ரவிக்குமார் வலியுறுத்தினார். கடந்த திமுக ஆட்சியில் இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் ராம ரவிக்குமார் கேட்கும் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவு கொடுத்திருந்தார். ஆனால், தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியாக இருந்தது. கடைசி வரை தர்கா பக்கத்தில் இருக்கும் தூணில் தீபம் ஏற்றவில்லை. மாறாக.. வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனாலும், 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ராம ரவிக்குமார் கோரிய தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டனர்.
இப்படியாக இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றம் வரை வந்திருக்கிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில், ராம ரவிக்குமார் கோரிய தூணில் தீபம் ஏற்ற இடைக்கால தடை விதிக்கப்படுவதாகவும்.. ஆனால், இந்த ஒருமுறை மட்டும் தீபம் ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுதான் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில்.. தவெகவுக்கு ஆதரவு கொடுத்த இடதுசாரிகள், வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். காங்கிரஸ் கட்சி இப்படி வெளிப்படையாக வலியுறுத்தவில்லை என்றாலும்.. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. "விஜய் அரசு திருப்பரங்குன்றம் விஷயத்தில் மக்களின் நலன் கருதி நல்ல முடிவெடுக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்திருக்கிறார்.
விசிக தரப்பு.. உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்கிற கூறியிருந்தாலும், பின்னர்.. தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்திருக்கிறது. இப்படி தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் ஓரணியில் எதிர்ப்பு குரலாய் மாறியிருக்கின்றன.
நிலைமை இவ்வாறு இருக்கையில்.. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தப்போகிறதா? அல்லது.. எதிர்க்கப்போகிறதா? என்பது கேள்வியாக மாறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications
