என்னங்க சொல்றீங்க..அவரா? போலி நூல்களை பரிந்துரைத்ததே பெருமாள் முருகன் தானா? ஹைகோர்ட்டில் பரபர வாதம்!
மதுரை: கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களில் போலி நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், முதலில் அதனை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். இந்நிலையில், அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்களை வாங்க பரிந்துரை செய்தவரே பெருமாள் முருகன் தான் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பரபர வாரத்தை முன் வைத்துள்ளார் வழக்கறிஞர் ராகவாச்சாரி.
நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், "கடநத 2024ல் தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட கோவை, திருச்சி, சேலம், கடலூர், நெல்லை ஆகிய மண்டல நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. உத்தரவுகள் எதுவும் முறையாக பின்பற்றப்படாமல் இந்த புத்தகக் கொள்முதல் நடைபெற்றுள்ளது.எனவே இதற்கு காரணமான பள்ளிக்கல்வித்துறை செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என நீதிமன்ற அவமதிப்பு வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சுமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "இந்த வழக்கில் சில அலுவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பொதுநூலக இயக்குனர் மாற்றப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணியாற்றிய நூலகர் காமாட்சி உள்ளிட்ட அதிகாரிகள் பணியினை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர " என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே நூலகர் காமாட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, காமாட்சிக்கு நூல் கொள்முதல் முறைகேட்டில் தொடர்பில்லை எனவும், நூல் கொள்முதல் விவகாரத்தில் நூலகர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவது ஏன்? முடிவெடுத்த உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும் தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் அகல்விளக்கு பதிப்பகத்தின் சில நூல்களை வாங்குவதற்கு பரிந்துரை செய்ததே நூல் பரிந்துரை குழுவில் இருந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் தான் எனவும் வாதிட்டார். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் பெருமாள் முருகன் அத்தகைய நூல்களை பரிந்துரைக்க வாய்ப்பு இல்லை என்றனர். இதற்கு பதில் அளித்த ராகவாச்சாரி பெருமாள் முருகன் அந்த நூல்களை பரிந்துரைக்கவில்லை என்றால் அதனை அவர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், பொது நூலக இயக்குனர் ஜெயந்தி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஆர்த்தி ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.




Click it and Unblock the Notifications
