"மக்கள் என் பேச்சை கேட்டார்கள்.. அதனால் தங்கம் விலை குறைந்தது” - பிரதமர் மோடி பேச்சு
லக்னோ: தங்கம் விலை சரிவைக் கண்டு வரும் நிலையில், "எனது வேண்டுகோளை மக்கள் ஏற்றுத் தங்கம் வாங்குவதைக் குறைத்தார்கள். அதனால் இப்போது தங்கம் விலை குறைந்துள்ளது" என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த ஐடிஐ பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "2023ல் அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள், நீங்கள் வளம் பெறுவீர்கள் என்று நான் கூறினேன். இதை இன்று ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பலரும் விவாதிக்கின்றனர். நான் அதைச் சொன்னபோது என்னைக் கேலி செய்தார்கள். ஆனால் இன்று முதலீடு செய்தவர்கள் வளம் பெற்றதற்கு வரலாறே சாட்சி.
ஓராண்டுக்கு முன்பு, தேவையில்லாமல் தங்கம் வாங்க வேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டேன். எனது வேண்டுகோளை மக்கள் ஏற்றுத் தங்கம் வாங்குவதைக் குறைத்தார்கள். அதனால் இப்போது தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று, மக்கள் என்னிடம், "மோடிஜி, நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டு எங்கள் பணத்தைச் சேமித்தோம்' என்று சொல்கிறார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவைத் தவிர்க்க வேண்டும் என்ற லால் பகதூர் சாஸ்திரிஜியின் வேண்டுகோளுக்கு இந்த நாட்டு மக்கள் செவிசாய்த்ததைப் போலவே, இன்றும் என் நாட்டின் குணம் அப்படியே நிலைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்று நான் ஒன்றைச் சொல்கிறேன்.. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். காலம் மாறிக்கொண்டிருக்கிறது. கோட், பேண்ட், டை அணிந்து பேப்பர் டிகிரியுடன் வலம் வருபவர்களை விட, உண்மையான திறன் கொண்டவர்களுக்கே இனி மதிப்பு அதிகம் இருக்கும்" எனப் பேசினார் பிரதமர் மோடி.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. சுமார் ஒரு வருட காலம் சவரன் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக இருந்து வந்தது தங்கம் விலை. இந்த வருடம் ஜனவரி 29ல் அதிகபட்ச விலை அளவாக, சவரன் ரூ.1,34,400 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரன் ரூபாய் 91,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெளிநாடுகளிடம் தங்கம், கச்சா எண்ணெய் வாங்கினால் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாகக் குறையும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். இதன் காரணமாகவே தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம், பொது போக்குவரத்தைப் பயன்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications
