வாழ்த்து + அட்வைஸ்.. காவ்யா மாறன் - அனிருத் திருமண ஜோடிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்
சென்னை: காவ்யா மாறன் - அனிருத் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி புதுமண ஜோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத், பிரபல தொழிலதிபர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸ் நாட்டில் கடந்த 11ம் தேதி நடந்து முடிந்தது. இந்த திருமணத்தில் இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
இதையடுத்து அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு இன்று சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரமாண்டமாக தொடங்கியது.
இந்த திருமண விழாவில் முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர்களான முக ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, திமுக முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தான் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
''காவேரி - கலாநிதி மாறன் அவர்களின் மகள் காவ்யா மற்றும் அனிருத் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தை தொடங்கும் இந்த மங்களரமான திருமண நாளில் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தம்பதி ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பு, பாசத்தை வளர்த்து கொள்ள வேண்டும். நீண்ட காலம் வாழ்ந்து குடும்பத்திற்கு முன்னேற்றத்தை கொண்டுவர வேண்டும். 2026 நவம்பர் 21ல் நடைபெறும் திருமண விழாக்களுக்கு என்னை அழைத்ததற்கு மனமார்ந்த நன்றிகள். இந்த மகத்தான தருணத்தில் மீண்டும் ஒருமுறை இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்'' என கூறியுள்ளார்.
முன்னதாக சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி காவ்யா மாறனின் தந்தை கலாநிதி மாறன் தனது மனைவி காவேரியுடன் சென்று அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியால் விழாவில் பங்கேற்க முடியாத நிலையில் அவர் தம்பதிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
