உளுந்தூர்பேட்டை அருகே ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்! 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய இளைஞர் மீட்பு
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ரீல்ஸ் மோகத்தால் 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய இளைஞரை, தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரத் (19) மற்றும் விக்னேஷ் (18). நண்பர்களான இவர்கள் இருவரும் ரீல்ஸ் எடுப்பதற்காக அதே ஊரில் உள்ள செல்லப்பா என்பவரின் விவசாயக் கிணற்றுக்கு சென்றுள்ளனர்.

80 அடி ஆழமுள்ள அந்த விவசாய கிணற்றின் மேல் நின்று ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென அவர்கள் வைத்திருந்த செல்போன் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
கிணற்றில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக இருவரும் பைப்பு வழியாக கிணற்றில் இறங்கியுள்ளனர். செல்போனை எடுத்துக் கொண்டு, விக்னேஷ் என்ற இளைஞர் பைப்பை பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல கிணற்றின் மேலே ஏறி வந்துள்ளார்.
அதன் பிறகு பரத் என்ற இளைஞனும் பைப்பு வழியாக ஏற முயன்றபோது, பைப்பு வழுக்கியதால் மீண்டும் கிணற்றிலேயே இறங்கி சிக்கிக் கொண்டார். சுமார் 2 மணி நேரமாக கிணற்றில் சிக்கிக் கொண்டதை குறித்து விக்னேஷ் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிக் கொண்ட பரத்தை, கிணற்றில் இறங்கி பத்திரமாக மீட்டனர். ரீல்ஸ் மோகத்தால் 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இளைஞர் ஒருவர் சிக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications
