ஜிடிஏ 6 விளையாட 4 நாள் லீவு.. 6 வருஷம் வேலையை நீடிக்கணுமாம்.. அப்படி இந்த கேமில் என்ன இருக்கு தெரியுமா?
சென்னை: ரஜினி படம் ரிலீஸ் என்றால் இப்போதும் தியேட்டர் வாசலில் முதல் நாள் முதல் காட்சி பார்க்க வரிசையில் இருக்கும் ரசிகர்களை பார்த்து இருப்போம். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாரின் படங்களுக்கு கட்டவுட் வைத்து பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய அதே ரசிகர்கள் இன்றும் வயது எறினாலும் அந்த உற்சாகத்தை குறைத்துக் கொள்ளவில்லை. சிலர் தங்களுடைய பிள்ளைகளையும், பேர குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு படம் பார்க்க வருகிறார்கள். ரசிகர்களுக்கு வயசானாலும் அவர்களுடைய கொண்டாட்டத்துக்கு மட்டும் வயதே ஆகவில்லை.
இதே மாதிரியான ஒரு விஷயம் தான் இப்போ வீடியோ கேம் உலகத்தில நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக "கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6" எனப்படும் ஜிடிஏ 6 விளையாட்டுக்காக இளைஞர்கள் மட்டுமல்லாமல் 30, 40 வயதை கடந்தவர்களும் காத்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் பள்ளி, கல்லூரி முடிந்ததும் கணினி முன்பு உட்கார்ந்து ஜிடிஏ விளையாடியவர்கள், இப்போது வேலை, குடும்பம் என பிசியாக இருந்தாலும் இந்த புதிய கேம்க்காக மீண்டும் குழந்தையாக மாற தயாராக இருக்கிறார்கள்.
ஜிடிஏ 6 கேம் பிரியர்கள்
இவர்களைத்தான் இணையத்தில் ஜாலியாக "பூமர் அங்கிள்ஸ்" என்று அழைக்கிறார்கள். ஆனால் இந்த அங்கள்ஸ் செய்யும் அலப்பறை சாதாரணமானது இல்லை. ஜிடிஏ 6 விளையாடுவதற்காக அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு 4 நாள் விடுமுறை கொடுக்கப்பட்ட சம்பவம் இப்போ இணையத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஸ்டீவர்ட் ராணுவ முகாமில் 9வது பிரிகேட் இன்ஜினியர் பட்டாலியனில் பணியாற்றும் வீரர்களுக்கு வித்தியாசமான சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. லெப்டினன்ட் கர்னல் ரியான் ஹாட்ஜ்சன் கையெழுத்திட்ட அந்த அறிவிப்பின்படி, "குறிப்பிட்ட காலத்திற்குள் மீண்டும் பணிக்காலத்தை நீட்டிக்க ஒப்புக்கொள்ளும் வீரர்களுக்கு 4 நாள் சிறப்பு விடுமுறை வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கேமிற்காக இப்படியா?
இதில் தகுதி பெற்ற 130 வீரர்களில் 43 பேர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் இங்கேதான் ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது. இந்த 4 நாள் விடுமுறையை பெறுவதற்காக வீரர்கள் தங்களுடைய ராணுவ பணியை மேலும் 2 முதல் 6 வருஷம் வர நீடிக்க ஒப்புக்கொள்ள வேண்டுமாம். அதாவது 4 நாள் லீவு கிடைக்கிறது என்பதற்காக 2 முதல் 6 வருஷம் கூடுதலாக வேலை செய்ய ஒப்பு கொண்டிருக்கிறார்கள். அந்த விடுமுறைக்கு பின்னால் ஜிடிஏ மீதான எதிர்பார்ப்பு இருப்பது தான் இந்த தகவலை இன்னும் சுவாரசியமாகிறது.

கேமுக்குள் இருக்கும் விஷயம்
ஒரு வீடியோ கோமக்காக இவ்வளவு பெரிய முடிவா என்று கேட்கத் தோன்றினாலும் ஜிடிஏ ரசிகர்களிடம் கேட்டால் இதெல்லாம் சாதாரணம்ப்பா என்று சொல்லி விடுவார்கள். இந்த அளவுக்கு ஜிடிஏ 6 மீது எதிர்பார்ப்பு இருப்பதற்கு முக்கிய காரணம், இதற்கு முந்தைய பிரதான கேம் வெளியான காலம்தான். ஜிடிஏ 5 கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது. அதற்குப் பிறகு 13 வருஷங்களாக இந்த தொடரின் அடுத்த பெரிய பாகத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இடையில் ஜிடிஏ 5ல் ஆன்லைன் உலகம் தொடர்ந்து ரசிகர்களை விளையாட வைத்தாலும் புதிய கதையுடன் அடுத்த பாகம் எப்போது வரும் என்று கேள்வி மட்டும் ஓயவே இல்லை.
ஜிடிஏ என்றாலே சுதந்திரமான நகரத்தை சுற்றுவது, கார் ஓட்டுவது, வித்தியாசமான மிஷின் துப்பாக்கிகளை கையாள்வது, வேறொரு கதாபாத்திரங்களின் வாழ்க்கைக்குள் செல்வது என விளையாட்டுக்குள் ஒரு தனி உலகமே இருக்கும். அதனால்தான் ஒரு தலைமுறையையே இந்த கேம் கட்டி போட்டு இருக்கிறது. ஜிடிஏ 6 கதைக்களம் லியோ டினா என்ற கற்பனை மாகாணத்தில் நடக்கிறது. இது அமெரிக்காவில் ஃப்ளோரிடியா மயானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மையமாக மீண்டும் வைஸ் சிட்டி இடம்பெறுகிறது.

இந்த முறை ஹீரோ, ஹீரோயின்
இந்த முறை லூசியா காமினேஸ் மற்றும் ஜேஷன் டுவால் என்ற 2 முக்கிய கதாபாத்திரங்களை சுற்றி கதை நகர்கிறது. இந்த லூசியா கேரக்டர் இன்னொரு காரணத்துக்காகவும் கவனம் பெறுகிறது ஜிடிஏவின் பிரதான தொடரின் முழுமையாக உருவாக்கப்பட்ட பெண் கதாநாயகியாக அவர் இடம் பெறுவது இதுவே முதல் முறை. இதனால் பழைய ஜிடிஏ ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் புதிய தலைமுறை கேம் ரசிகர்களுக்கும் இந்த பாகத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
சினிமா ரசிகர்கள் மாதிரி தான்
நம்ம ஊரில் ரஜினி படங்களை பார்க்கும்போது ரசிகர்களை எடுத்துக் கொள்ளுங்கள். 1980, 90களில் அவருடைய படங்களை பார்த்தவர்கள் இன்றைக்கும் புதிய படம் வந்தால் அதே உற்சாகத்துடன் தியேட்டருக்கு போகிறார்கள். அவர்களுடைய குழந்தைகளும் ரஜினி ரசிகர்களாக இருக்கிறார்கள். அதே போலத்தான் இந்த கேம் கூட இருக்கிறது. இப்படி பார்த்தால் கேமிங் என்பது ஒரு குறிப்பிட்ட வயதுக்கான பொழுதுபோக்கு என்ற காலம் போய்விட்டது போலிருக்கிறது.
இந்த கேமிற்காக பள்ளி மாணவர்களும் காத்திருக்கிறார்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்களும், குடும்பஸ்தர்களும் இந்த காத்திருக்கிறார்கள். ராணுவ வீரர்களும் இந்த 4 நாள் விடுமுறை எடுத்துட்டு 2 வருஷம் என்றாலும் வேலை பார்க்கிறோம் என இந்த கூட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள் என்றால் ஜிடிஏ 6 வந்தால் இந்த பூமர்ஸ் அங்கிள்ஸ் என்னென்ன அலப்பறை பண்ண போகிறார்களோ!


Click it and Unblock the Notifications
