2 திருமணங்கள்.. டூப்ளிகேட் பெற்றோர்! மணமகன்களை வேட்டையாடிய 'கல்யாண ராணி' கார்த்திகா? நீளும் லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒரு பகீர் மோசடி அரங்கேறி இருக்கிறது. திருமணம் செய்த அடுத்த நாளே அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என ஓட்டம் பிடித்து இருக்கிறார் மணப்பெண். அவரை தேடி அவரது வீட்டுக்கு கணவன் சென்றபோதுதான் அந்த அதிர்ச்சி தகவல் தெரிந்திருக்கிறது. ஏற்கனவே மற்றொருவரை திருமணம் செய்து இதே போல திருமணம் செய்த அடுத்த நாளே ஓட்டம் பிடித்திருக்கிறார் அந்த பெண். மேலும் அவரது பெற்றோர் உண்மையான பெற்றோர் இல்லை என்பதும், புரோக்கரை பெற்றோர் என சொல்லி திருமண மோசடி செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 6-வது தெருவைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம் உப்புண்டார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவருக்கும் கடந்த 13.09.2026 அன்று தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Marriage Fraud Scam

இடைத்தரகர்கள் மூலமாக பெண் பார்க்கப்பட்டு, சித்தார்த்தன் கார்த்திகாவைத் திருமணம் செய்துள்ளார். இதற்காக இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்ததுடன், மணப்பெண்ணுக்கு 3 பவுன் தங்க நகைகளையும் மாப்பிள்ளை சித்தார்த்தன் தரப்பினர் வழங்கியுள்ளனர்.

மேலும், சுமார் ரூ.15 லட்சம் செலவு செய்து திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். திருமணம் முடிந்த இரண்டாவது நாளில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரைப் பார்த்துவிட்டு வருவதாகவும் கார்த்திகா கூறியுள்ளார். இதனை நம்பிய புதுமாப்பிள்ளை சித்தார்த்தன், அவரை அனுப்பி வைத்ததுடன், மருத்துவச் செலவுக்காகப் பணமும் கொடுத்துள்ளார். ஆனால், அதன்பிறகு கார்த்திகா ஊருக்குத் திரும்பி வரவில்லை.

ஒவ்வொரு முறையும் சித்தார்த்தன், கார்த்திகாவையும் அவரது பெற்றோர் என்று கூறியவர்களையும் தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்று வந்துவிடுவார், நாளை வந்துவிடுவார் எனக் கூறி சமாளித்து வந்துள்ளனர். இந்நிலையில், தலை தீபாவளி என்பதால் மனைவியை வருமாறு சித்தார்த்தன் அழைத்தபோதும், மருத்துவமனை, சிகிச்சை எனத் தொடர்ந்து காரணங்களைக் கூறி வந்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த சித்தார்த்தன், தனது உறவினர்களுடன் இன்று காலை கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கார்த்திகாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு கார்த்திகா இல்லை. அவரது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ரத்தம் வாங்குவதற்காக கார்த்திகா மதுரைக்குச் சென்றிருப்பதாகவும், கார்த்திகாவின் பெற்றோர் என்று கூறிய முனீஸ்வரி - மாரியப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அப்போது, நாமக்கல் மாவட்டம் பூச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர், தனது மனைவி கார்த்திகா எங்கே என்று கேட்டு அங்கு வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்தார்த்தன் குடும்பத்தினர், நீங்கள் கார்த்திகாவின் கணவரா? என்று கேட்டுள்ளனர். அதற்கு ரஞ்சித்குமார், ஆம் என்றும், கடந்த நவம்பர் 1-ம் தேதி தங்கள் ஊரில் உள்ள கோவிலில் தனக்கும் கார்த்திகாவுக்கும் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட சித்தார்த்தன் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து, ரஞ்சித்குமார் நீங்கள் யார் என்று திரும்பக் கேட்க, கடந்த செப்டம்பர் மாதம் கார்த்திகாவுக்கும் சித்தார்த்தனுக்கும் திருமணம் நடைபெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

அப்போதுதான் ஒரே பெண் இரண்டு பேரைத் திருமணம் செய்து இரு தரப்பினரும் ஏமாற்றப்பட்டிருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இரு மாப்பிள்ளைகளும், கார்த்திகாவின் பெற்றோர் என்று கூறி பெண் பார்ப்பது முதல் திருமணம் வரை உடனிருந்த முனீஸ்வரி - மாரியப்பனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு முனீஸ்வரி, மிகவும் சாதாரணமாக, அவளுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள். நாங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் வேண்டுமானால் காவல் நிலையத்தில் புகார் கொடுங்கள். அங்கு வந்து நாங்கள் பதில் சொல்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இரு மாப்பிள்ளைகளும் அந்த வீட்டிற்குள் அமர்ந்ததுடன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே, காவல்துறையின் அவசர உதவி எண்ணான 100-ஐ தொடர்புகொண்ட முனீஸ்வரி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்கள் எனது வீட்டை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் எனது சொந்தக்காரர்கள் கிடையாது. எனது பெண்ணுக்குத் திருமணம் செய்துள்ளனர். எனக்கு உதவி வேண்டும். என்னுடைய பெயர் முனீஸ்வரி. என்னுடைய மாப்பிள்ளை பெயர் மாரியப்பன் என்று கூறியுள்ளார்.

இது இரு தரப்பினருக்கும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், இரு மாப்பிள்ளை வீட்டாரிடமும் தங்களது உண்மையான பெயர்களைக் கூறாமல் வேறு பெயர்களைக் கூறி அவர்கள் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, எனது வீட்டை அடித்து நொறுக்குகிறார்கள். என்னை அவதூறாகப் பேசுகிறார்கள். எனது கையைப் பிடித்து இழுக்கிறார்கள். எனவே உடனடியாக வாருங்கள் என்று முனீஸ்வரி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். ஆனால், இரு மாப்பிள்ளை வீட்டாரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

100-ஐ தொடர்புகொண்டு பேசிய பிறகு, மீண்டும் வேறொருவரைத் தொடர்புகொண்ட முனீஸ்வரி, போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிட்டேன். காவல் நிலையத்திற்கு வருகிறேன். வீட்டை உடைத்துவிட்டார்கள். எவ்வளவு நஷ்டஈடு என்று சொல்லி புகார் கொடுங்கள் எனப் பேசியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பிக்க முயன்ற முனீஸ்வரியை, இரு தரப்பினரும் வீட்டின் கதவைப் பூட்டி வெளியே செல்லவிடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவழியாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரி அமைதியானார். போலீசார் முதலில் மாரியப்பனிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இரு மாப்பிள்ளைகளும் இவர்தான் உங்களது அப்பா என்று தங்களிடம் கூறியதாகத் தெரிவித்தனர். இதற்கு மாரியப்பன், ஐயோ! நான் அப்பா இல்லை. புரோக்கர் என்று கூறியுள்ளார். மேலும், கார்த்திகா யார் என்று போலீசார் விசாரித்தபோது, அவர் முனீஸ்வரியின் அக்கா மகள் என்றும், தற்போது மலேசியாவில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனால் இரு மாப்பிள்ளை வீட்டாருக்கும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி ஏற்பட்டது.

முதலில் போலீசாரிடம் தன்னை புரோக்கர் என்று கூறிய மாரியப்பன், சிறிது நேரத்திற்குப் பிறகு முனீஸ்வரிக்கு தான் தான் கணவர் என்று தெரிவித்துள்ளார். இதனால் டென்ஷனான போலீசார், உண்மையைச் சொல்லப் போகிறாயா இல்லையா என்று கேட்க, அவர் திருதிருவென விழித்துள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த ஒரு சிறுவனைக் கைகாட்டிய சித்தார்த்தன், இவர்தான் கார்த்திகாவின் தம்பி என்றும், அவருக்கு தான் மோதிரம் அணிவித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது, அவரும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

பெற்றோரும் போலி, அம்மா - அப்பாவும் போலி. எல்லாம் சரி, திருமணப் பெண் எங்கே? என்று போலீசார் கேட்டபோது, அவர் ரத்தம் வாங்குவதற்காக மதுரைக்குச் சென்றிருப்பதாக முனீஸ்வரி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, வீட்டில் ஓர் அறை பூட்டப்பட்டிருப்பதைக் கண்ட போலீசார், அதற்குள் கார்த்திகா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கதவைத் திறக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு முனீஸ்வரி, அந்த அறையின் சாவி தொலைந்துவிட்டதாகவும், வேண்டுமானால் கதவை உடைத்துப் பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், போலீசார் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அந்த அறையை முனீஸ்வரி பூட்டும் வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன. இதையடுத்து, தொலைந்துவிட்டதாகக் கூறப்பட்ட சாவி கண்டுபிடிக்கப்பட்டு அறை திறக்கப்பட்டது. போலீசார் அறைக்குள் சோதனை செய்தபோதும் கார்த்திகா அங்கு இல்லை. இதனைத் தொடர்ந்து, இரு மாப்பிள்ளை வீட்டாரையும், மாரியப்பன் மற்றும் முனீஸ்வரியையும் போலீசார் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சித்தார்த்தன் மற்றும் ரஞ்சித்குமார் அளித்த புகார்களின் அடிப்படையில், கார்த்திகா, மாரியப்பன், முனீஸ்வரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மயக்கம் வருவதாகவும் முனீஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து, அவரைச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி வருவதாகவும், கார்த்திகாவைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சித்தார்த்தன், ரஞ்சித்குமார் ஆகிய இருவரைத் தவிர இந்தக் கும்பல் வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கும் கார்த்திகாவைத் திருமணம் செய்து வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இடைத்தரகர்கள் மூலமாக கார்த்திகாவின் புகைப்படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி வைப்பது மட்டுமின்றி, பெண் பார்க்க வருபவர்களை கோவில்பட்டியில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு வரவழைத்து கார்த்திகாவைப் பார்க்க வைப்பதும் இந்தக் கும்பலின் வழக்கமாக இருந்துள்ளது. மேலும், கார்த்திகாவின் தாயார் என்று அறிமுகப்படுத்தப்பட்ட முனீஸ்வரிக்கு உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதால் திருமணத்தை எவ்வளவு விரைவாக நடத்த முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்துங்கள் என்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் கூறி வந்துள்ளனர்.

இதனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு எவ்வித சந்தேகமும் ஏற்படாத வகையில் அனைத்தையும் திட்டமிட்டு இந்தக் கும்பல் அரங்கேற்றியிருப்பது தெரியவந்துள்ளது. கார்த்திகா, முனீஸ்வரி, மாரியப்பன் ஆகிய மூவர் மட்டுமே இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், இவர்களுக்குப் பின்னால் மிகப்பெரிய மோசடி நெட்வொர்க் செயல்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கார்த்திகா பிடிபட்ட பின்னரே உண்மையில் அவர் பெயர் அதுதானா? இல்லையா என்பதும்,இதுகுறித்து முழுமையான விசாரணை முடிவடைந்த பின்னரே இந்தத் திருமண மோசடியின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவரும் என்கின்றனர் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+