அடுத்த ஆண்டு முதல் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்.. நிவாரண தொகையும் உயர்த்தப்படும்! அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி
தூத்துக்குடி: மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள கடல் ஆம்புலன்ஸ் திட்டம் எந்த இடத்தில் தொடங்குவது என்பது குறித்து தற்போது பரிசீலனை நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டத்தை களத்தில் செயல்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகை மற்றும் உதவித் தொகைகள் உயர்த்தப்படும் என்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் வளாகத்தில் நடைபெற்ற உலக மீன்வள தின விழாவில் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," அனைத்து மீனவர் சொந்தங்களுக்கு மீனவர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் திட்டுக்களாகத் தேங்கியுள்ளது தொடர்பாக ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ஸ்ரீநாத்
தொழில்நுட்பக் குழுவினருடன் ஆலோசித்து சாம்பல் கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு செயல்படுத்தும் மீனவர்களுக்கான திட்டங்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே இருப்பதால், அவற்றைத் தமிழிலும் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடல் ஆம்புலன்ஸ்
இந்தக் கோரிக்கை தொடர்பாக தற்போது நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பேசப்பட்டது, மீனவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப திட்டங்கள் தமிழில் கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது ஏற்படும் விபத்துகள் மற்றும் அவசர மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள கடல் ஆம்புலன்ஸ் திட்டம் எந்த இடத்தில் தொடங்குவது என்பது குறித்து தற்போது பரிசீலனை நடைபெற்று வருகிறது.
மீனவர்கள் நலத்திட்டம்
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டத்தை களத்தில் செயல்படுத்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் 65 பயனாளிகளுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செயற்கைக்கோள் தொலைபேசி
மீனவர்கள் கடலுக்குச் சென்று திரும்பும்போது விபத்துகளில் சிக்குபவர்கள், மீனவக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆகியோருக்கு உதவுவதுடன், உயர் அதிர்வெண் தொலைத்தொடர்பு வசதி மற்றும் செயற்கைக்கோள் தொலைபேசி சேவைகளையும் பயனாளிகளுக்குக் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீனவர்கள் போராட்டங்கள்
காசிமேடு பகுதியில் மீனவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் , சில தீய சக்திகளின் தூண்டுதலால் போராட்டங்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் மற்றும் மீன்வளத் துறை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாகப் பேசி வருகிறது, மீன்வளத் துறை இயக்குநர் அடுத்த நாளில் தலைமைச் செயலரைச் சந்தித்து இதுகுறித்து ஆலோசிக்க உள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை மட்டுமின்றி உதவித் தொகைகளும் உயர்த்தப்படும்" என கூறினார்.




Click it and Unblock the Notifications
