ஹார்முஸ் ஜலசந்தியை ஃபுல் கன்ட்ரோல் எடுத்துட்டோம்! பெருமையாக சொன்ன டிரம்ப்.. ஈரானுக்கு மிரட்டல்
வாஷிங்டன்: உலக எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடி என்று சொல்லப்படக்கூடிய ஹார்முஸ் ஜலசந்தி, தங்கள் நாட்டின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். தாங்கள் வகுத்த விதிகளை மீறி ஹார்முஸ் ஜலசந்தியில் செல்லக்கூடாது என்று ஈரான் எச்சரித்து வரும் நிலையில், அமெரிக்கா அந்த பகுதியை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக அந்த நாட்டின் அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது:-

எங்களிடமே முழு கட்டுப்பாடு
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடந்த வாரம் அதிக எண்ணிக்கையில் கப்பல்கள் கடந்துள்ளன. எங்கள் கடற்படை அந்த பகுதியை முற்றுகையிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் முழு கட்டுபாட்டை நாங்கள் வைத்து இருக்கிறோம். ஈரானை ஒரு போதும் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம். டர்ட்டி பாமை ஈரான் தயாரிக்க கூடும் என்ற கவலைகள் குறித்து நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.
எங்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
அத்தகைய ஆயுதத்தை ஈரான் தயாரிக்க ஒருபோதும் விட மாட்டோம். ஈரானில் நடைபெறும் பலவற்றை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். அவர்கள் கூறும் அனைத்தும் எங்களுக்கு தெரியும். அவர்கள் யார் என்றும் எங்களுக்கு தெரியும். எங்கே இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் கண்டறிவோம். இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்லும் கப்பல்கள் எங்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்று ஈரான் அதிகாரிகள் எச்சரித்து இருந்த நிலையில், டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார். அமெரிக்க தலைநகரில் ரசாயன ஆயுதம் கொண்டோ, டர்ட்டி பாம் கொண்டோ தனது நிர்வாக அமைப்பு அதிகாரிகளை ஈரான் தாக்கினால் இதுவரை எந்த நாடும் சந்தித்திராத அளவுக்கு ஈரான் கடும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்.
51 ஆண்டுகளாக மக்களிடம் உளறுகிறார்கள்
ஈரானுடன் எப்படி ஒப்பந்தம் ஏற்படுகிறதோ அதை பொறுத்து எண்ணெய் விலை இருக்கும். ஈரான் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள விரும்புகிறது. ஆனால், நான் ஏற்றுக்கொள்ளாத வகையில் ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறார்கள். நாங்கள் உண்மையான ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். 51 ஆண்டுகளாக அவர்கள் செய்து வரும் பொய்யான ஒப்பந்தம் மேற்கொள்ளப்போவது இல்லை.
51 ஆண்டுகளாக அவர்கள் மக்களிடம் உளறிக்கொண்டு இருக்கிறார்கள். நான் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து 25 டிரில்லியன் டாலர் அளவுக்கு புதிய செல்வ வளத்தை உருவாக்கியுள்ளோம். அதுவும் 2 ஆண்டுகளுக்குள். தேர்தலுக்கு பிறகு 4 டிரில்லியன் டாலர்களை இழந்துள்ளோம். உலக நாடுகள் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை விரும்பவில்லை. நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதையும் நீங்கள் நினைவில் வைத்து இருப்பீர்கள் என நம்புகிறேன்' என்றார்.
மேற்காசியாவில் நீடிக்கும் பதற்றம்
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. உலகின் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடப்பதால், இது சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹார்முஸ் ஜலசந்தியில் முன் அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறி வரும் நிலையில் டிரம்ப் தற்போது அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். இதனால், மேற்காசியவில் பதற்றம் அதிகரித்துள்ளது.




Click it and Unblock the Notifications
