இந்தியாவை பாருங்க.. நாமும் GDP-ல் 20% வரணும்! வாயாற புகழ்ந்த டிரம்ப்! ஆனால், கதையே வேற!
வாஷிங்டன்: சீன பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்த அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். அதில் இந்தியாவை அவர் பாராட்டி தள்ளியிருக்கிறார்.
இந்தியாவின் குறைந்த வட்டியை பாராட்டிய அவர், 7% GDP வளர்ச்சியை பாருங்கள் என்று பெருமையுடன் கூறியிருக்கிறார். ஆனால், மறுபுறம் அமெரிக்க மத்திய வங்கி அரசியல் ரீதியாக செயல்படுவதாகவும்.. எனவேதான் வட்டியை குறைக்காமல் ஏற்றிக்கொண்டே வருகிறது என்றும் விமர்சித்திருக்கிறார். வட்டியை குறைத்தால் அமெரிக்காவும் GDP-ல் 15-20% அளவுக்கு உச்சத்தை எட்ட முடியும் என்று கூறியிருக்கிறார்.

வெளிப்படையாக பார்த்தால் டிரம்ப் இந்தியாவை பாராட்டுவதை போலத்தான் இருக்கும். உண்மையில் அவருக்கு அமெரிக்க மத்திய வங்கி மீது கடுப்பு. அதனால்தான் நம்மை பாராட்டுவதை போல, சொந்த நாட்டு மத்திய வங்கியை விமர்சித்திருக்கிறார். பொருளாதார புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும்போது வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு பதிலாக குறைக்க வேண்டும் என்பதே டிரம்பின் வலியுறுத்தல். அமெரிக்க மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் இதைத்தான் செய்ததாக டிரம்ப் கூறுகிறார்.
ஆனால், இப்போது மத்திய வங்கி முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், எனவே வட்டியை குறைப்பதற்கு பதில் அதிகரிக்கிறது என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
மத்திய வங்கியுடனான டிரம்பின் மோதல், ஏதோ இன்று நேற்று புதியதாக நடந்தது கிடையாது. கடந்த 2018ம் ஆண்டு அவர் முதல் முறையாக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது, மத்திய வங்கியின் தலைவராக ஜெரோம் பவுலை நியமித்தார். சரி நம்மாளுதானே! நாம் சொல்வதை எல்லாம் கேட்பார் என்றுதான் நினைத்திருந்தார். ஆனால், பவுல் அப்படி செய்யவில்லை. வட்டியை குறைக்காமல் ஏற்றியிருந்தார். இது டிரம்புக்கு பெரிய ஷாக் கொடுத்தது.
எனவே இந்த முறை எப்படியாவது மத்திய வங்கியை வழிக்கு கொண்டுவர வேண்டும் என, சில ஜோடிக்கப்பட்ட வழக்குகளையும் தொடுத்தார். ஆனால், எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இப்போது பவுலின் பதவிக்காலம் முடிந்து, புதிய தலைவராக கெவின் வார்ஷ் பொறுப்பேற்றிருக்கிறார். ஆனால், கமிட்டி உறுப்பினர்களில் பவுல் இருப்பதால் டிரம்பால் எதுவும் செய்ய முடியவில்லை.
சரி இதையெல்லாம் தாண்டி டிரம்ப் சொல்வது வேலைக்கு ஆகுமா? என்று கேட்டால்.. கதைக்கு ஆகாத மேட்டர் இது என பொருளாதார நிபுணர்கள் விமர்சித்திருக்கின்றனர். இந்தியாவின் பொருளாதாரத்தையும், அமெரிக்காவின் வேலை வாய்ப்பு உருவாக்கம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதையும் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் பணவீக்கம் எகிறியிருக்கிறது. இதைக்கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டியை உயர்த்துவதுதான் சரியான வழி. அப்போதுதான் பணப்புழக்கம் குறைந்து, விற்பனை சரிந்து.. பொருட்களின் விலை கட்டுக்குள் வரும். ஆனால், வட்டியை உயர்த்தினால் தற்காலிகமான வளர்ச்சி இருப்பதை போல தெரிந்தாலும், பெரிய பிரச்சனை ஏற்படும். அதேபோல டிரம்ப் சொல்லும் 15-20% GDP எல்லாம் சாத்தியமே இல்லை.
இந்தியா வளரும் நாடு என்பதால் நமக்கு GDP 7% அவசியம். ஆனால், அமெரிக்க வளர்ந்த நாடு. ஆண்டுக்கு 2-3% GDP இருந்தாலே அது அந்நாட்டை பொறுத்தவரை சிறப்பான வளர்ச்சிதான். ஆக எப்படி பார்த்தாலும்.. டிரம்பின் பாராட்டு என்பது இந்தியாவை உயர்த்த அல்ல.. மாறாக சொந்த நாட்டின் மத்திய வங்கியை குறை கூறதான் என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications
