திருப்பரங்குன்றம் விவகாரம்.. விஜய் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.. மாணிக்கம் தாகூர் விளக்கம்!
சென்னை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு தமிழக காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்கள் நலனை கருத்தில் கொண்டு தவெக கூடணி அரசு நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவம்பர் 24 கார்த்திகை தீப நாளன்று தீபம் ஏற்றிக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீபத்தை ஏற்ற தேவஸ்தான நிர்வாகிகள், அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபம் ஏற்றச் செல்லும் நபர்களை மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்யவும் அறிவுறுத்தி இருக்கிறது.

மறுபக்கம் சிக்கந்தர் தர்காவுக்கு செல்ல எந்தவித தடையும் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. திருப்பரங்குன்றம் உச்சி மலையில் இருப்பது சர்வே கல் தூண் என்று தமிழக அரசு வாதிட்டு வருகிறது. இப்படியான சூழலில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதால், பாஜக, இந்து முன்னணி, அதிமுக, அண்ணாமலை உள்ளிட்ட தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் மதநல்லிணக்கத்திற்கு பிரச்சனை வரலாம் என்று பார்க்கப்படுகிறது. இது திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பார்க்கப்படுகிறது. கடந்த முறை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கிய போதும், தீபம் ஏற்றப்படவில்லை. அதில் திமுக அரசு தீவிரமாக இருந்தது.
தற்போது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பது தான் தவெகவின் நிலைப்பாடு என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசி இருக்கிறார். கடந்த முறை தவெக தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக கூட அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி அரசு திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அரசின் முடிவிற்கு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி முழு ஆதரவு அளிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications
