திருப்பரங்குன்றம் விவகாரம்.. அடுத்த என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறீங்க முதல்வரே? ஸ்டாலின் கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு அடுத்தக் கட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என்பதை முதல்வர் விஜய் விளக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீர்ப்பு கொடுத்தார். அதனை எதிர்த்து திமுக ஆட்சியில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் தீபம் ஏற்ற வந்த போது காவல்துறையினர், நாங்கள் உங்களை அனுமதி மாட்டோம்.. எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தனர். ஆங்கிலத்தில் அந்த போலீஸ் அதிகாரி கூறிய வார்த்தைகள் தமிழ்நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது. அதுமட்டுமல்லாமல் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர்.
தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த நிலையில், இடைக்கால தீர்ப்பாக கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண், தீபத்தூண் அல்ல.. அது வெறும் கல் தூண் என்று தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இதனால் தவெக அரசும், திமுகவின் பாதையில் பயணிப்பதாக பாஜக, இந்து முன்னணி, அண்ணாமலை, அதிமுக உள்ளிட்ட தரப்பினர் விமர்சித்தனர். தற்போது உச்சநீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பு தவெக அரசுக்கு பின்னடைவாக மாறி இருக்கிறது. இதுதொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. தவெக அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் வழக்கு உச்சக்கட்ட பரபரப்பில் இருந்த போது விஜய் அமைதியாக இருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தவெக தங்களின் நிலைப்பாட்டை கூட அறிவிக்கவில்லை. தற்போது விஜய் முதல்வராக இருப்பதால், அடுத்தக் கட்டமாக என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
