மதுரை கூட்டுறவு வங்கியில் ரூ.3.66 கோடி நகை மாயம்! இரு ஊழியர்களும் குண்டர் சட்டத்தில் கைதாகிறார்களா?
மதுரை: மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள வீரபெருமாள்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அடகு வைத்திருந்த 346.55 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3.33 லட்சம் ரொக்கப் பணம் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தச் சங்கத்தில் எழுத்தராகப் பணியாற்றி வந்த மணிகண்டன், கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை. மேலும், அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததுடன், நகைப்பெட்டகத்தின் சாவியையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நகைகளின் இருப்பைச் சரிபார்க்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆய்வுக்குழுவினர் மாற்றுச் சாவி மூலம் நகைப்பெட்டகத்தைத் திறந்து, ஆவணங்களுடன் நகைகளின் இருப்பை ஒப்பிட்டுச் சரிபார்த்தபோது, 102 நகைப்பைகளில் வைக்கப்பட்டிருந்த 346.55 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
மேலும், ரூ.3.33 லட்சம் ரொக்கப்பணமும் காணாமல் போயிருந்தது. கடந்த ஜூன் 29 முதல் அக்டோபர் 23-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடு நடைபெற்றிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மாயமான நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3.66 கோடி எனக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சேடப்பட்டி கூட்டுறவு சார்பதிவாளர் பரமசிவம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கண்ணம்மாள் அளித்த புகாரின்பேரில், எழுத்தர் மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் விற்பனையாளர் மகாலிங்கம் ஆகியோர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அடகு நகைகளை மோசடி செய்த சம்பவத்தைக் கண்டித்து, அப்துல்கலாம் அறிவியல் விவசாய மக்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் ஆபேல் மூர்த்தி தலைமையில் 60க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அப்போது, தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அதிக எண்ணிக்கையிலான நபர்களை ஒரே நேரத்தில் அலுவலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்ததால், சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சங்கத்தின் தலைவர் ஆபேல் மூர்த்தி மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்து மனு அளித்தார். அப்போது, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சங்க நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைகளுக்காக நம்பிக்கையுடன் கூட்டுறவு சங்கங்களில் அடகு வைக்கும் நகைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம் என்றனர்.



Click it and Unblock the Notifications
