யூடியூபர் துருவ் ராட்டிக்கு பிடிவாரண்ட்.. ஜாமீனில் கூட வெளி வர முடியாது.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி: 2018ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் யூடியூபர் யூடியூபர் துருவ் ராட்டிக்கு டெல்லி நீதிமன்றம் இன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. தற்போது ஜெர்மனியில் இருக்கும் துருவ் ராட்டி, கடந்த அக்டோபரில் இந்தியா வந்தபோது கரப்பான் பூச்சி ஜனதா நடத்திய போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது டெல்லி போலீசாரால் அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து விமர்சன வீடியோக்களை வெளியிட்டு வருபவர் துருவ் ராட்டி. யூடியூப் தளத்தில் அதிக பலோயர்களை கொண்ட துருவ் ராட்டிக்கு இப்போது டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பிடிவாரண்ட்
2018ம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் துருவ் ராட்டிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 'ஐ சப்போர்ட் நரேந்திர மோடி' என்ற பேஸ்புக் பக்கத்தின் நிறுவனர் விகாஸ் பாண்டே அளித்த புகாரின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'பாஜக ஐடி செல் பார்ட் 2' என்ற வீடியோவில் தன்னை பற்றி துருவ் ராட்டி தவறான, அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக விகாஸ் பாண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
என்ன நடந்தது
இந்த வழக்கை விசாரித்த சாகேத் நீதிமன்ற நீதித்துறை நடுவர் அனம் ரயீஸ் கான், ஏற்கெனவே துருவ் ராட்டிக்கு சம்மன் மற்றும் இரண்டு முறை ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்டுகளை பிறப்பித்திருந்தார். ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவ்வளவு ஏன் நீதிமன்ற வாரண்டுகளை அவரிடம் சேர்ப்பதிலும் சிக்கல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தற்போது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த விசாரணை டிசம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்தல் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடப்பதாக கூறி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி கட்சி கடந்த அக்டோபர் மாதம் போராட்டம் நடத்தியிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜெர்மனியில் இருந்து துருவ் ராட்டி இந்தியா வந்திருந்தார். அக்டோபர் 8ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
தடுப்பு காவல்
தொடர்ந்து அக்டோபர் 10ஆம் தேதி குருகிராமின் செக்டர் 56 பகுதியில் உள்ள அவரது வீட்டில் டெல்லி போலீசார் அவரை தடுப்பு காவலில் வைத்தனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவிருந்த 'ஜந்தர் மந்தர் 2.0' போராட்டத்தை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. போராட்டத்தில் துருவ் ராட்டி பங்கேற்காமல் இருக்கவே அவர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து அக்டோபர் 11ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
விடுவிக்கப்பட்ட பின்னர் வீடியோ வெளியிட்ட துருவ் ராட்டி, தன்னை போலீசார் கைது செய்யவில்லை என்றும் கடத்தி சென்றதாகவும் குற்றம்சாட்டினார். சுமார் 20 பேர் சாதாரண உடையில் அதிகாலை 7 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்து அழைத்து சென்றதாக கூறியிருக்கிறார். மேலும், பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றி மாற்றி அழைத்து சென்றதாகவும் தனது வக்கீலை தொடர்பு கொள்ளக்கூட முடியவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். மேலும், தனது செல்போனை பயன்படுத்தக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய குடியுரிமை
இதற்கிடையே துருவ் ராட்டி வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் எனவும் தகவல் பரவியது. இருப்பினும், இதை திட்டவட்டமாக மறுத்த அவர், தனது இந்திய பாஸ்போர்ட்டை காட்டினார். இந்தியக் குடிமகனாக போராட்டத்தில் பங்கேற்க தனக்கு உரிமை இருப்பதாகவும், தொடர்ந்து நாட்டுக்காக குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார்.




Click it and Unblock the Notifications
