கொழும்பில் மிக பயங்கர தாக்குதலுக்கு புலிகள் திட்டம்- உளவுப் பிரிவு எச்சரிக்கை
கொழும்பு:கொழும்பில் மாபெரும் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
கிழக்கு மாவட்டத்தில் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் கொழும்பை தாக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசுக்குச் சொந்தமான டெய்லி நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 1,000 கிலோ வெடிமருந்துகளுடன் கொழும்பை நிலைகுலைய வைக்க புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும், ரத்தக் களறி ஏற்படுத்த திட்மிட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்காக கொழும்பில் ஊடுருவி வரும் புலிகள் விடுதிகளிலும் புற நகர்ப் பகுதிகளில் பிற இடங்களிலும் தங்கியுள்ளதாகவும், கொரில்லா தாக்குதலுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. வட மேற்குப் பகுதியில் 1,000 கிலோ சி-4 ரக வெடிபொருட்களுடன் லாரி பிடிபட்டதால் புலிகளின் தாக்குதல் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த லாரி பிடிபடாமல் போயிருந்தால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாபெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இந்த லாரியின் டிரைவரும் கிளீனரும் கடந்த 2 மாதங்களாக கொழும்பில் ஒரு பட்ஜெட் லாட்ஜில் தான் தங்கியிருந்துள்ளனர். இதனால் தான் லாட்ஜுகளில் தங்கியிருந்த தமிழர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அதை உலக சமுதாயமும் அரசியல்வாதிகளும் பிரச்சனையாக்கிவிட்டன.
பொது மக்களை புலிகள் இது போன்ற தாக்குதலுக்கு பயன்படுத்துவதால் விடுதிகளில் தங்கியுள்ள தமிழர்கள் சோதனைக்குள்ளாவது இயற்கை தான் என அந்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தக் கட்டுரையின் உண்மையான நோக்கம் வெளியாகியுள்ளது. புலிகள் பெயரைச் சொல்லி, தமிழர்களை கொழும்பை விட்டு வெளியேற்றும் அரசின் திட்டத்துக்கு தோல்வி கிடைத்ததால் நொந்து போயிருக்கும் உள்ளங்களுக்கு மருந்தாக இந்தக் கட்டுரையை அரசு வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications