பெண் குடியரசுத் தலைவரை கொண்டாடும்முதல் மாநிலம் தமிழகம்: கருணாநிதி பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஒரு பெண் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவதை கொண்டாடும் முதல் மாநிலமாக தமிழகம் விளங்குவது இந்திய அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீல், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆகும் பொன்னான பெருமையைப் பெறவுள்ளார்.

ஜூலை 1ம் தேதி திமுக சார்பில் பெண்கள் பேரணி நடத்தப்படவுள்ளது. இதில் பிரதீபா பாட்டீலும் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் பேரணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பெண்கள் சென்னையில் குழுமவுள்ளனர். பெண்களுக்கு எதிரான அநீதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் பேரணியாக இது அமையும் என்று கூறியுள்ளார் முதல்வர்.

அதே அறிக்கையில் கேள்வி பதில் பாணியில் முதல்வர் அளித்துள்ள பதில்கள்:

கேள்வி: மதுரையில் முன்னாள் மேயர் குழந்தைவேலுவின் கார் எரித்து சாம்பலாக்கப்பட்டது குறித்து?

கருணாநிதி: என்றோ ஒரு நாள் பிடி சாம்பலாகப் போகிறவர்கள், தர்மபுரியில் 3 மாணவிகளை உயிரோடு எரித்து அவர்கள் உடல்களை சாம்பலாக்கி வேடிக்கை பார்த்த விஷப் பாம்புகள், மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என வெறி பிடித்து அலைகின்றனர்.

இந்த அழகில் திமுக வன்முறையில் ஈடுபடுவதாக அராஜக அதிமுகவினர் குற்றம் சாட்டுவது, மயில், குயில், மாடப்புறாக்களை பார்த்து ஆந்தைகளும் கோட்டான்களும், வல்லூறுகளும் பழிப்பது போல் உள்ளது.

கேள்வி: கொடநாடு எஸ்டேட்டில் 90 அறைகள் இல்லை என ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

கருணாநிதி: அத்தனை அறைகள் இல்லை என்றால் மாளிகையில் எத்தனை அறைகள் உள்ளன என்பதைக் கூற வேண்டும்.

முதலில் கொடநாடு குறித்து என்ன கூறினார்? அவருக்கு தனிப்பட்ட முறையில் வேண்டியவர்களுக்கு சொந்தம். அங்கே சென்று தங்கியதற்காக அரசு படாதபாடு படுத்துகிறது என கூறினார். தற்போது அந்த மாளிகை அவருக்கே உரியது என்ற ஆவணங்களை காட்டிய பிறகு அதற்கு பதிலளிக்காமல் இருக்கிறார். அப்படியானால் முதலில் கூறியது பொய் என ஒப்புக் கொள்கிறாரா?

அதில் அவரும் அவரது உடன்பிறவாத சகோதரியும் ஆளுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்பது உண்மையா இல்லையா என பதில் சொல்லட்டும். பிறகு 80 அறைகளா, 90 அறைகளா என்பதை விளக்கட்டும்.

கேள்வி: கொடநாடு பகுதி ஆதிவாசி மக்கள் தங்களை சந்தித்து இயற்கையாக வரும் ஊற்று நீரை தடுத்தி நிறுத்திவிட்டதாக புகார் மனு கொடுத்துள்ளது குறித்து?

கருணாநிதி: அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்ததற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு நான் முக்கியம் இல்லாத பிரச்சனையில் தலையிடுவதாக எதிர்கட்சி தலைவர் பேட்டி கொடுத்தார். அதை கருதிதானோ என்னவோ அந்த மக்கள் என்னிடம் நேரடியாக மனு கொடுத்துள்ளனர்.

கேள்வி: நீதிபதிகள், தேர்தல் ஆணையம் எதற்கும் அப்பாற்பட்டவையா?

கருணாநிதி: ஒரு சிலரின் நடவடிக்கைகளை மனதில் கொண்டு தவறான எண்ணம் கொள்ளக் கூடாது. அந்த இடங்களில் உள்ள சிலர் அப்படி நினைத்துக் கொண்டிருக்கலாம். அது தவறு என்று கூறியுள்ளார் கருணாநிதி.

முன்னதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திரை மல்லி எத்திராஜன் மகன் திருமணத்தில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகையில், நான் ஒரு சுயநலத்தின் காரணமாக தொண்டர்கள் மீது பற்றும் பாசமும் கொண்டவன்.

இந்த இயக்கம் வலுப்பெற தனி நபரால் முடியாது. அனைவரும் கூடி உறுதியோடு செயல்பட்டால் தான் இந்த இயக்கத்தை வலுப் பெறச் செய்ய முடியும்.

அப்படி இந்த இயக்கம் வளர்ந்திருப்பதால் தான் யார் யாரோ இதை அழிக்கப் பார்க்கின்றனர். இதை வீழ்த்த நினைத்தவர்கள் தான் வீழ்ந்து போனார்களே தவிர இந்த இயக்கம் நன்றாக தழைத்திருக்கிறது.

இதற்கு காரணம் மன உறுதியும் லட்சியமும் கொண்ட தொண்டர்களின் உறுதியான செயல்பாடு மட்டுமே. அனைவரும் சேர்ந்து தான் இந்த இயக்கத்தை வழி நடத்த முடியும்.

எல்லோரும் இருந்தால் தான் இயக்கத்தை வளர்க்க முடியும். அதனால் தான் தொண்டர்கள் மீது நான் அதிக அளவு பற்றும் பாசமும் கொண்டிருக்கிறேன்.

இயக்கம் இருந்தால் தான் நான் தலைவன். நான் தலைவனாக இருந்தால் தான் எனக்கு பெருமை என்றால் அந்த பெருமையை இயக்கத்திற்கு சேர்ப்பவர்கள் தொண்டர்கள். அவர்கள் தான் இயக்கத்தின் அடிமரம், ஆணிவேர் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+