சோனியா பிரதமராவதை கலாம் தடுத்ததால்அவருக்கு பதவி தர மறுக்கின்றனர்: ஜெ
மதுரை:தில்லுமுல்லு செய்து குறுக்கு வழியில் தேர்தலில் ஜெயிக்க திமுக நினைக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூவை ஆதரித்து செல்லூர் 60 அடி சாலையில் நடந்து பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது
![]() |
திண்டுக்கல் இடைத்தேர்தல் கடந்த 1973ம் ஆண்டு நடந்தபோது அதிமுகவை ஆமோக வெற்றி பெற செய்தது இந்த மதுரை மாவட்டம்தான்.
1980ம் ஆண்டு புரட்சித் தலைவரை இரண்டாவது முறையாக முதல்வராக்கிய பெருமை மதுரை மேற்கு தொகுதிக்கு உண்டு. இந்த வரலாற்று சரித்திரத்தை மீண்டும் படைக்க நீங்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை தந்து தான் திமுக ஆட்சியை கைப்பற்றியது. அவற்றை மைனாரிட்டி கருணாநிதி அரசு நிறைவேற்றியுள்ளதா. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டதா.
குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி வழங்கப்பட்டதா. இலவச எரிவாயு இணைப்பு அளிக்கப்பட்டதா. இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதா. தரமான அரசி ரூ.2க்கு அளித்தார்களா. வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டதா. இல்லையே.
இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு, கொலை, கொள்ளைகள் நடந்து வருகின்றன. அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் சென்னை மட்டுமின்றி நகர்ப்புறங்களிலும் நடக்கின்றன.
மதுரையில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களை பார்க்கும்போது இது ஜனநாயக நாடுதானா என்ற சந்தேகம் எழுகிறது. இதை போலீஸாரும் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். மதுரையில் அதிமுகவினர் தேர்தல் பணி செய்யவிடாமல் தடுத்து அராஜகம் செய்து வருகின்றனர். இதனை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
மக்களின் பிரச்சனைகள் குறித்து ஜனநாயகரீதியாக போராட்டம் நடத்தும் எதிர்க் கட்சிகள் மீது போலீஸ் துணையுடன் வன்முறையை தூண்டி விடுவதும், போராட்டம் நடத்தும் எதிர்க் கட்சியினரை தாக்குவதும், ஜாமீனில் வெளியில் வர முடியாத வகையில் வழக்கு பதிவு செய்வதும் தான் இப்போது நடைமுறையில் உள்ளது.
மதுரையில் (தினகரன்) கருத்து கணிப்பின் எதிரொலியாக மாநகர் முழுவதும் திமுகவினர் வன்முறை செயல்களில் ஈடுபட்டு 3 பேர் உயிரோடு தீயில் மடிந்தது, பொது மக்களுக்கு இடையூறாக பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது, தீயிட்டு கொளுத்தியது ஆகிய செயல்களை பார்க்கும்போது இது ஜனநாயக நாடுதானா என நினைக்க தோன்றுகிறது. (அப்படியே தர்மபுரி பஸ் எரிப்பையும் நினைத்துப் பார்ப்பது நல்லது)
இங்கு சட்டத்தை தன் கரங்களில் எடுத்துக் கொண்டு தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். தேர்தலில் குறுக்கு வழியில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற நினைப்பது ஜனநாயகத்தை அடியோடு அழிப்பது போலாகும்.
சில நாட்களுக்கு முன் ஐக்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். ஜனாதிபதி தேர்தலில் இந்தியா மட்டுமின்றி உலகமே பாராட்டும் அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தோம்.
இதற்கு மத்தியில் ஆட்சியுள்ளவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு அப்துல் கலாம் மீது அப்படி என்ன வெறுப்பு என்று தெரியவில்லை.
கடந்த 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிந்த போது நாட்டின் பிரதமர் யார் என எதிர்பார்த்தபோது சோனியா காந்தியை பிரதமராக ஏற்க காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் விரும்பின, கருணாநிதியும் இதற்கு சம்மதித்தார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாமை சந்தித்த சோனியா காந்தி பிரதமர் பதவியை தான் ஏற்கபோவதில்லை என கூறினார். அப்துல் கலாம் சோனியாவை பிரதமராக்க இந்திய அரசியல் சட்டத்தில் இடம் இல்லை என கூறியதால் சோனியா அப்பதவியை ஏற்கவில்லை. ஆனால் சோனியா காந்தி தியாகம் செய்துவிட்டதாக பேசி வருகிறார்கள்.
அன்று பிரதமர் பதவியை ஏற்கவிடாமல் அப்துல் கலாம் தடுத்த கோபத்தில் சோனியா காந்தி, அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதியாவதை தடுத்து வருகிறார். தமிழினத் தலைவர் என தன்னைதானே கூறிக் கொள்ளும் கருணாநிதியும், ஒரு பச்சை தமிழன் ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரவு தர மறுக்கிறார்.
அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுபாட்டுக்குள் இருந்தது. மின்சார பற்றாக்குறையே இல்லை. கட்டுமான பொருட்கள் விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை பற்றி உலக நாடுகளே பாராட்டு தெரிவித்தன. சாதி, மத, கலவரம் இல்லாத அமைதி பூங்காவாக இருந்தது.
ஆனால் திமுக ஆட்சியில் வாக்களித்து மை காய்வதற்குள் விலைவாசி உயர்ந்து விட்டது. அத்தியாவசிய பொருள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. சிமெண்ட், கல், மணல், இரும்பு, ஏன் ஜல்லியின் விலை கூட உயர்ந்து விட்டது.
நேற்றிருந்த விலைவாசி இன்றில்லை, போன மாத விலை வாசியும் கூட இப்போது இல்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் என் ஆட்சியில் இருந்து விலைவாசியும் இல்லை. எல்லாம் ஜெட் வேகத்தில் வானத்தில் பறக்கிறது.
மாத மாதம் உங்கள் வீட்டு பட்ஜெட் உயர்ந்திருக்கிறதா, இல்லையா. அதிலிருந்தே விலைவாசி உயர்வை பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம்.செல்லூர் பகுதியில் வெள்ள அபாயத்தை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கப் படவேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த தத்தனேரி மேம்பாலம் பணியை முடிக்க திமுக அரசு நிதி ஒதுக்கவில்லை.
திமுகவினர் இங்கு நடத்தி கொண்டிருக்கும் அராஜகங்கள் நீங்கள் நன்கு அறிந்த ஒன்று. இப்போது நாடு இருக்கும் நிலையை நீங்கள் மாற்ற வேண்டும். இது உங்கள் எண்ணத்தில் இருக்கிறது.
மேற்கு தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையமும் உடந்தையாக இருந்து விடக் கூடாது. நீதிபதிகளாகிய மேற்கு தொகுதி வாக்காள பெருமக்களை வன்முறை சம்பவங்களுக்கு முடிவு கட்ட மக்கள் அமைதியாக வாழ்வதற்காக வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜூக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும் என்றார்.













Click it and Unblock the Notifications