அதிமுக தேர்தல் பிரசாரத்தில் திமுகவினர்கல்வீச்சு-பாண்டுரங்கன் காயம்
மதுரை:மதுரை மேற்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்தபோது முன்னாள் அதிமுக அமைச்சர் பாண்டுரங்கன் தாக்கப்பட்டார். சரமாரியாக வீசப்பட்ட கல்வீச்சில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதி தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சியினர் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தேர்தல் பிரசாரம் நாளையுடன் முடிவடைவதால், அங்கு உச்சகட்ட பிரசாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் எஸ்.எஸ்.காலனி பகுதியில், அதிமுக வேட்பாளர் செல்லூர் ராஜுவுக்கு ஆதரவு கேட்டு முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரித்தனர்.
அப்போது திடீரென திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவினர் மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கினர். இதில் பாண்டுரங்கனின் வலது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனால் அவர் வலியில் துடித்தார். உடனடியாக அவரை அதிமுகவினர் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications