அரியாசானம் ஏறுகிறார் அன்னை, வரவேற்க வாரீர்
சென்னை:பாரதத்தின் முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறப் போகும் பிரதீபா பாட்டீலை வரவேற்க பெண்கள் அனைவரும் திரண்டு சென்னை மகளிர் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளர்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் கட்டமே, தலைநகர் டெல்லி முதல் நாட்டின் எல்லா பகுதிகளிலும் பெரும் பரபரப்பை உருவாக்கி, 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அடைய முடியாத மகிழ்ச்சியை அனைவரும் அனுபவிக்கும் வண்ணம் பிரதீபா பாட்டீலின் பெயர் அறிவிக்கப்பட்டது.
சூடு கண்ட பூனைகளாய் ஆகிவிட்ட அரசியல்வாதிகள் சிலருக்கும், ஆதிக்க வெறியர்களுக்கும் அந்தப் பெண் வேட்பாளர் அறிவிப்பே, ஒரு ஜோக் என கிண்டல் செய்யும் அளவிற்கு கேலிக் கூத்தாக தெரிந்தது. தரக்குறவாக விமர்சித்து, தங்களது தகுதியை வெளிப்படுத்தினார்கள், சேறு வாரி இறைத்தார்கள்.
வானத்தை கீறி வழிகாட்ட போகிறோம் என கூரையேறி குருவி பிடிக்க முடியாதவர்கள் கூக்குரலிட்டு குப்புற வீழ்ந்த கதையாயிற்று அவர்களின் கதை.
பாவம், அவர்கள் எப்படியாவது போகட்டும். நாம் எடுத்த முடிவை நிறைவேற்ற தொடங்குவோம். தொடக்கத்தையே விழாவாக எடுத்திடுவோம்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்,
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைபில்லை காணென்று கும்மியடி
என முண்டாசு கவிஞன் பாரதி மொழிந்த பாடல் வரிகளாக, பாவையர் பெருஞ்சேனை, சென்னை வீதிகளில் பேரணியாக பெருகிட இருக்கிறது.
தொட்டில் ஆடும் பெண் குழந்தைக்கே புரட்சி கவிஞர் பாரதிதாசன் கவிதை பாடினார்.
"மின்னல் ஒளியே, விலை மதியா ரத்தினமே!
கன்னல் பிழிந்து கலந்த கனிச்சாறே!
மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்
காடு, மணக்க வரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்கு
தூண்டா விளக்காய் துலங்கும் பெருமாட்டி!
பண்ணிற் சரம் விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தை
கண்ணிற் கனவில் சிந்திக் கட்டழிக்க வந்தவளே!"
அந்த இருபெரும் கவிஞர்களின் வீர எழுத்துகளால் ஒவ்வொன்றும் வெற்றி பெண்ணுரு கொண்டு தலை நகர் வீதியிலே அணி வகுத்து வரும் காட்சியை காணக் கண்கள் துடிக்கின்றன.
கடமை, கண்ணியம், கட்டுபாடு காத்து நடக்கும் அப்பேரணி கண்டு, "நடந்தாய் வாழி காவேரி" எனும் சிலப்பதிகாரச் செய்யுள், செவிப் பறை மோதி - சிந்தையில் உணர்வினை ஏற்றும் .
ஆதிக்க வெறியை தூக்கி எறிந்து
தூள் தூளாக்கும் தூய நாளின் விடியல்
காணப் போகிறது, இந்தத் தொன்மை நிறைப்
பண்புடைய நாடு - பெண் துயரம் நீக்கிடவே
மண் மீது நாம் ஏற்றும் கொடியே-
தமிழக தலை நகரில் ஜூலை முதல் நாள்
பேரணி
அனைத்துக் கட்சி அருமை சகோதரிகாள்
வாரீர்! வாரீர்!!
அணி அணியாக வாரீர்!!!
அன்னை நாடு காத்திட என்றுமே
அழியா ஜனநாயகம் பூத்திட
அன்னையொருவர் ஏறுகிறார்
அரியாசனம்!
அதற்கு வாழ்த்தளிக்க
வரவேற்று மகிழ
வாரீர்! வாரீர்!!
என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.












Click it and Unblock the Notifications