நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித் தேர் விழா
திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நாளை ஆனித் தேர் திருவிழா நடைபெறவுள்ளது.
திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. தினமும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விஷேச அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
மாலையில் சுவாமி, அம்பாள் தனித்தனி ரதங்களில் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. நேற்று சுவாமி தங்க பல்லக்கிலும், அம்பாள் முத்து பல்லக்கிலும் திருவீதியுலா வந்தனர்.
இன்று பெருமான் வெள்ளை பட்டு சாத்தி உட்பிரகார பிரதட்சணமும், பச்சை பட்டு சாத்தி திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை கங்காளநாதன் தங்க சப்பரத்தில் வீதியுலாவும், பெருமான் கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் திருவீதியுலா நடைபெறும்.
இத்திருவிழாவின் 9ம் நாளான நாளை அதிகாலை 3 மணிக்கு காந்திமதி அம்பாள் விஷேச அலங்காரத்தில் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் 9 மணிக்கு மேல் தேர் வடம் இழுக்கப்படும். ஒரே நாளில் தேர் நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4 ரத வீதிகளிலும் உள்ள கடைகள் நாளை அடைக்கப்படும்.
திருவிழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை டவுன் வீதிகளுக்குள் பேருந்துகள் அனுமதிக்கப்படாமல் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications