ஏலத்திற்கு வரும் காந்தியடிகளின் கடைசி கடிதம்:காப்பாற்ற மத்திய அரசு தீவிரம்
டெல்லி:மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவற்கு முன் கடைசியாக எழுதிய கடிதம் இங்கிலாந்தில் ஏலத்திற்கு வரவுள்ளது.
இதையடுத்து அந்தக் கடிதம் ஏலம் போய் விடாமல் காக்கும் நடவடிக்கையில், மத்திய அரசு இறங்கியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள கிறிஸ்டி ஏல மையம் உலக அளவில் பிரலமான ஏல மையம் ஆகும். இங்கு புகழ் பெற்ற பல பொருட்கள், பிரபலங்கள் பயன்படுத்திய பொருட்கள், கடிதங்கள் உள்ளிட்டவற்றை ஏலம் விடுவார்கள்.
தற்போது இந்த ஏல மையத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி எழுதிய முக்கியக் கடிதம் ஒன்று ஏலத்திற்கு வந்துள்ளது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு எழுதிய கடிதம் இது.
1948ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி காந்தி எழுதிய இந்தக் கடிதத்தில், முஸ்லீம்கள் மீது பரிவு காட்ட வேண்டும், அன்பு செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் காந்தியடிகள்.
இந்தக் கடிதத்தை ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த அல்பின் ஷ்ராம் என்பவரிடமிருந்து கிறிஸ்டி விலைக்கு வாங்கியுள்ளது. நெப்போலியன், சர்ச்சில் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் எழுதிய கடிதங்களின் தொகுப்பை சேகரித்து வைத்துள்ளவர் அல்பின்.
காந்தியின் கடிதத்தை ஜூலை 3ம் தேதி ஏலத்திற்குக் கொண்டு வருகிறது கிறிஸ்டி. இத் தகவல் வெளியானவுடன் மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கே நேரடியாக தலையிட்டு, எப்படியாவது காந்தியின் கடிதத்தை மீட்க வேண்டும் என வெளியுறவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து வெளியுறவுத்துறையும், கலாச்சாரத் துறையும் இணைந்து காந்தி கடிதத்தை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி மகாத்மா காந்தி ஏராளமான கடிதங்களை எழுதியுள்ளார். அதில் 18 கடிதங்கள் கடந்த 1998ம் ஆண்டு ஏலத்திற்கு விடப்பட்டது. அந்தக் கடிதங்களை இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களே ஏலத்தில் எடுத்து காந்தி கடிதம் பிறர் கைக்குப் போவதை தடுத்தனர்.
இந்த முறை மத்திய அரசே நேரடியாக தலையிட்டுள்ளதால் காந்தியடிகள் எழுதிய இந்தக் கடிதம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications