மணப்பாறை டாக்டர் மீது குவியும் புகார்கள்
திருச்சி:மகனை விட்டு சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ய வைத்து கைதாகியுள்ள மணப்பாறை டாக்டர் முருகேசன், அவரது மனைவி காந்திமதி ஆகியோர் மீதும் மேலும் சிலர் புகார் கூறியுள்ளனர்.
15 வயதாகும் தங்களது மகன் திலீபன் ராஜ், ஒரு பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவம் பார்த்ததாக கூறப் போய் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர் மணப்பாறை டாக்டர் தம்பதிகளான முருகேசனும், காந்திமதியும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது மகன் திலீபன் ராஜ் தலைமறைவாக உள்ளார்.
![]() |
இந்த நிலையில் டாக்டர் தம்பதி மேலும் இருவர் பரபரப்பு புகார்களைக் கூறியுள்ளனர்.
மணப்பாறை அருகே உள்ள இலங்காகுறிச்சியைச் சேர்ந்தவர் சாலிக். இவரது மனைவி பாத்திமா (30). தனது 3வது பிரசவத்திற்காக முருகேசனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
![]() |
அப்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த இரு நாட்களிலேயே குழந்தை இறந்து விட்டது. இதைத் தொடர்ந்து பாத்திமாவுக்கு உடல் முழுவதும் நீர் கோர்த்துக் கொண்டு வீங்கியது. சிறுநீரும் வெளியேறவில்லை.
இதையடுத்து அவருக்கு ரத்தத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி வேறு ஒரு மருத்துவமனையைப் பரிந்துரைத்து அங்கு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினாராம் முருகேசன்.
![]() |
இந்த நிலையில், மதுரைக்குச் சென்ற பாத்திமா கனி அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆலோசனை கேட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷன் செய்த பகுதியில் சீழ் கட்டியுள்ளதாக கூறி அதை அறுவைச் சிகிச்சை மூலம் சரி செய்துள்ளனர்.
ஆனால் வீடு திரும்பிய பாத்திமாவுக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் வீங்கியது. கடும் காய்ச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அவரை எம்.ஆர்.ஐ ஸ்கேனுக்கு உட்படுத்திய டாக்டர்கள், தற்போது மருத்துவமனையில் அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தனது மகளின் நிலைக்கு டாக்டர் தம்பதியும், அவர்களது மகனும்தான் காரணம் என பாத்திமாவின் தந்தை கூறியுள்ளார். அவர் கூறுகையில், எனது மகளுக்கு டாக்டர் தம்பதியின் மகன் திலீபன்தான் காரணம். அவர்தான் அறுவைச் சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தார்.
இதுதொடர்பாக இதுவரை போலீஸில் புகார் கூறவில்லை. நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதேபோல, அறுவைச் சிகிச்சை என்ற பெயரில் நன்றாக இருந்த தனது காலை டாக்டர் முருகேசன் துண்டித்து விட்டதாக தையல்காரர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
இவர் மணப்பாறையைச் சேர்ந்தவர். பெயர் சுப்ரமணியன். நேற்று மணப்பாறை டி.எஸ்.பி. ஸ்ரீதரை சந்தித்து இதுதொடர்பாக அவர் புகார் கொடுத்தார்.
அந்தப் புகாரில், கல்லப்பட்டியில் நான் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். எனக்கு தவமணி என்கிற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். தையல் வேலை செய்து பிழைத்து வருகிறேன்.
நன்றாக இருந்த எனக்கு வலது காலில் கட்டி வந்தது. நானே அதை உடைத்து விட்டேன். இதனால் காலில் சீல் கட்டிக் கொண்டது. இதையடுத்து டாக்டர் முருகேசனிடம் போய்க் காட்டினேன்.
பிப்ரவரி 5ம் தேதி குடும்பத்தோடு டாக்டர் முருகேசனின் மருத்துவமனைக்குச் சென்றோம். எனது காலைப் பரிசோதித்த டாக்டர் முருகேசன், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். அதன்படி செய்தோம்.
பரிசோதனைக்குப் பின்னர் எனக்கு சர்க்கரை அளவு அதிகம் இருக்கிறது. எனவேதான் கால் அழுகி விட்டது. முழங்கால் வரை வெட்டி எடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றார்.
இதையடுத்து அன்று இரவே எனது வலது காலை முழங்கால் வரை வெட்டித் துண்டித்து விட்டார். வெட்டிய காலை ஒரு பையில் போட்டு எனது மனைவியிடம் கொடுத்து இதை சுடுகாட்டில் போய் புதைத்து விடுமாறும் கூறினார். அறுவைச் சிகிச்சைக்காக 1000 ரூபாய் கட்டணம் கேட்டார்.
பின்னர் மருத்துவமனையில் ஒரு வாரம் இருந்தேன். அந்த ஒரு வாரமும் மருந்து, மாத்திரைகளுக்காக ரூ. 25ஆயிரம் வரை செலவிட்டேன். அதன் பின்னர் மருத்துவமனைக்கு ரூ. 27 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறினார். ஆனால் அவ்வளவு பணம் இல்லை என்றபோது ரூ. 21 ஆயிரம் ரூபாய் தருமாறு கூறி அதை வாங்கிக் கொண்ட பின்னரே டிஸ்சார்ஜ் செய்தார்.
நன்றாக இருந்த நான் இப்போது கால் இல்லாமல் முடங்கிப் போய் விட்டேன். எனது மகன் விறகு பொறுக்கி சம்பாதிக்கிறான். நண்பர்கள் உதவி செய்கிறார்கள்.
எனது நிலைக்கு டாக்டர் முருகேசன்தான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சுப்ரமணியன்.
இந்த இரு புகார்களும் டாக்டர் குடும்பம் மீதும் நெருக்கடியை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, டாக்டர் தம்பதியின் மகன் திலீபன் ராஜ் கோவையில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் கோவை விரைந்துள்ளனர்.
இதற்கிடையே, தலைமறைவாக உள்ள திலீபன் ராஜ் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.















Click it and Unblock the Notifications