பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக சென்னையில்நாளை பிரமாண்ட மகளிர் பேரணி
சென்னை:
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவாக சென்னையில் நாளை பிரமாண்டமான பேரணிக்கு திமுக கூட்டணி ஏற்பாடு செய்துள்ளது. இதில் பிரதீபாவும் பங்கேற்கிறார்.
இதில் பங்கேற்க அனைத்து கட்சி மகளிருக்கும் முதல்வர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலில் முதன்முறையாக பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டதை சிறப்பிக்கும் வகையில் பெண்கள் பங்கேற்கும் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரணி நாளை மாலை 3 மணிக்கு மன்றோ சிலை அருகில் தொடங்குகிறது.
பேரணியை பிரதீபாவும் முதல்வர் கருணாநிதியும் பார்வையிடுவதற்காக அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கும் அண்ணா சிலைக்கும் இடையே மாபெரும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல கட்சிகளையும் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் கமிஷ்னர் லத்திகா சரண் கூறுகையில்,
பேரணியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பெண்கள் பங்கேற்க உள்ளனர். பாதுகாப்பிற்காக 10 கம்பெனி சிறப்பு போலீஸாருடன் மொத்தம் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
சுமார் 4 மணி நேரம் இந்த பேரணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியை முன்னிட்டு போக்குவரத்தில் சில மாற்றங்களும் செய்யப்படவுள்ளன என்றார்.
இதில் லட்சக்கணக்கான பெண்களை பங்கேற்க வைக்க திமுக திட்டமிட்டுள்ளது. மகளிரை சென்னைக்கு அழைத்து வர மாவட்டச் செயலாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பஸ்கள், வேன்கள், கார்களை திமுகவினர் புக் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications