அழகிரி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம்!
சென்னை:
மதுரை மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதை காங்கிரஸ் கட்சியை விட திமுகவினரே படு ஆர்ப்பாட்டமாக கொண்டாடினார்கள். மதுரையில் மு.க.அழகிரியின் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் நடத்தப்பட்டது.
மதுரை மேற்குத் தொகுதியில் நின்று வென்றது காங்கிரஸ் வேட்பாளர் ராஜேந்திரன் என்றாலும் கூட ஏதோ திமுகதான் வெற்றி பெற்றுள்ளதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு திமுகவினர் இந்த வெற்றியை படு ஆர்ப்பாட்டமாக கொண்டாடினர்.
ராஜேந்திரன் வெற்றி பெற்ற செய்தி பரவியதும் மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் திருவிழா உற்சாகத்தை அடைந்தனர். நகர் முழுவதும் ஆங்காங்கே திரண்ட அழகிரியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை சரமாரியாக கொளுத்தினர். இனிப்புகளை பொதுமக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.
உற்சாகத்தின் உச்சத்திற்குச் சென்ற தொண்டர்கள் அழகிரியின் பிரமாண்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து அக மகிழ்ந்தனர். அழகிரியின் வீடு உள்ள பகுதி திருவிழாக் கோலம் பூண்டு காணப்பட்டது.
நகர் முழுவதிலுமிருந்து திரண்டு வந்த ஆதரவாளர்களால் அழகிரி வீடு உள்ள பகுதி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது.
மதுரையில் மட்டுமல்லாமல் சென்னையிலும் திமுகவினர் படு உற்சாகமாக காணப்பட்டனர். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
நேற்று பகல் முழுவதும் அங்கு பட்டாசுச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பொதுத் தேர்தல் முடிவைப் போல மதுரை இடைத் தேர்தல் முடிவை திமுகவினர் கொண்டாடினர்.
காலை 8 மணியிலிருந்தே திமுகவினர் அறிவாலயத்தில் கூடி விட்டனர். இதனால் அறிவாலயத்தில் பெரும் கூட்டமாக காணப்பட்டது. அதேபோல முதல்வரின் கோபாலபுரம் வீட்டிலும் திமுகவினர் பெருமளவில் திரண்டு உற்சாகமாக காணப்பட்டனர்.
முன்னணி நிலவரம் தெரியத் தெரிய உற்சாகம் கூடிக் கொண்டே போனது, தொண்டர் கூட்டமும் அதிகரித்தவண்ணம் இருந்தது. காலை பத்தே கால் மணிக்கு அறிவாலயம் செல்வதற்காக முதல்வர் வெளியே வந்தபோது கூடியிருந்த தொண்டர் கடலைப் பார்த்து ஆச்சரியப்பட்டு மகிழ்ந்து போனார்.
அவர் வெளியே வர முடியாத அளவுக்கு தொண்டர் கூட்டம் நெக்கியடித்தது. தொண்டர்களின் ஆர்வத்தையும், ஆர்ப்பரிப்பையும் பார்த்துப் பூரித்துப் போனார் முதல்வர்.












Click it and Unblock the Notifications