திருச்சி: நகை பட்டரை அதிபர், சிறுவன் கொலை!ரூ.35 லட்ச நகைகள், பணம் கொள்ளை!!
திருச்சி:
திருச்சியில் நகை பட்டரை அதிபரும் அவரது அண்ணன் மகனும் கொலை செய்யப்பட்டு சுமார் ரூ. 35 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திருச்சி கீழசாயக்கார தெருவைச் சேர்ந்த நாகராஜ் (48) நகை தயாரிக்கும் பட்டரை நடத்தி வந்தார். கூடவே சிறிய நகைக் கடையும் வைத்திருந்தார்.
இதில் பெண்கள் உள்பட 10 பேர் பணியாற்றி வருகின்றனர்.
தனது கடையை ஒட்டி சில வீடுகளையும் வாங்கி வாடகைக்கு விட்டிருந்த இவர் அதில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்தார்.
அந்த அறையில் தான் நகைகள், பணத்தை வைத்தருப்பார். இவரது அண்ணன் மகனான சுந்தரம் என்ற 15 வயது சிறுவனும் அவரது அறையில் தூங்குவான்.
இந் நிலையில் இன்று காலை இந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே நாகராஜும் சிறுவன் சுந்தரமும் கொலையாகிக் கிடந்தனர்.
நாகராஜின் வாயில் ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. சிறுவனின் கழுத்தை நெரிக்க பயன்படுத்தப்பட்ட டவலும் அவன் மீது கிடந்தது.
அந்த அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு சுமார் 3 கிேலா நகைகளும் ரூ. 5 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கொலையான நாகராஜுக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
நகை, பணத்துக்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொலையான நாகராஜ், சுந்தரத்தின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications