முஷாரப் விமானம் சுடப்பட்டது
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் சென்ற விமானம் சுடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரைக் கொல்ல நடந்த முயற்சி இது என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தான் தென் மேற்கில் உள்ள துர்பாத் என்ற நகரில் வெள்ள பாதிப்பை பார்வையிட இன்று முஷாரப் சென்றார். இதற்காக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தளத்திலிருந்து அவர் விமானம் மூலம் துர்பாத் கிளம்பினார்.
![]() |
அப்போது முஷாரப் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இருப்பினும் அதில் விமானத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. முஷாரப்புக்கும் ஒன்றும் ஆகவில்லை. அவரது விமானம் துர்பாத் நகரில் பத்திரமாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ தளத்திற்கு அருகே உள்ள 2 மாடிக் கட்டடத்தின் உச்சியில் நீண்ட இரண்டு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளரும் கூறியுள்ளார்.
துப்பாக்கியால் சுட்டது போக ஒரு ராக்கெட்டும், முஷாரப் விமானம் மீது வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட 2 மாடிக் கட்டடத்திற்கு அருகே வசிக்கும் அர்ஷத் மஹமூத் என்பவரும், துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதாக கூறியுள்ளார். அந்தக் கட்டடம் காலியாக உள்ளது. வாடகைக்கு விட முடிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று இரவு கணவன், மனைவி மற்றும் இரு குழந்தைகள் அங்கு வந்து சென்றதாக மஹமூத் கூறியுள்ளார்.
ஆனால் இதை ராணுவம் மறுத்துள்ளது. அப்படி ஒரு முயற்சியே நடக்கவில்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடந்ததாக கூற்படும் பகுதியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது.
முஷாரப் பதவிக்கு வந்த பின்னர் இருமுறை அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்துள்ளன. அந்த இரு முயற்சிகளின் பின்னணியிலும் அல் கொய்தா அமைப்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
இஸ்லாமாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ள மதரஸாவை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. அங்குள்ள தீவிரவாதத்திற்கு ஆதரவான மாணவர்களைப் பிடிக்க போராடி வருகிறது. இதுதொடர்பாக நடந்த சண்டையில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முஷாரப்பைக் கொல்ல முயற்சி நடந்ததாக வெளியாகியுள்ள தகவலால் பாகிஸ்தானில் பரபரப்பு அதிகரித்துள்ளது.













Click it and Unblock the Notifications