ரயில் நேரங்களில் மாற்றம்-பயணிகள் மறியல்பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னை:
ரயில் நேரங்கள் தாறுமாறாக மாற்றப்பட்டதால், ஆத்திரமடைந்த பயணிகள் திருவள்ளூர் மற்றும் அரக்கோணத்தில் பல மணி நேரம் மறியல் போராட்டத்தில் குதித்ததால் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் போக்குவரத்து கடுமையாக பாதித்ததது.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் மின்சார ரயில்களின் நேரம் திடீர் என மாற்றப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் வெளியூர் பயணிகள் குமுறல் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் ரயில் பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
அரக்கோணத்திலிருந்து இன்று காலை 7 மணிக்கு சென்னைக்குப் புறப்பட வேண்டிய ரயில் 8 மணியாகியும் கிளம்பவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.
இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த ரயில் மறியல் போராட்டத்தால் அங்கு பதட்டம் நிலவியது. போலீஸார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்திய பின்னர் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
அதேபோல திருவள்ளூரிலும் பயணிகள் மறியல் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தினசரி ரயில்கள் தாமதமாக வருவதாகவும், ஒழுங்கான நேரத்தில் ரயில்கள் வந்து செல்வது இல்லை என்றும் பயணிகள் கோபத்துடன் கூறினர்.
போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பிற்பகல் 12 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த இரு மறியல் போராட்டங்கள் காரணமாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் பாதிக்கப்பட்டன.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், தாதர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் ஹெளரா எக்ஸ்பிரஸ், ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications