காவிக்கு அஞ்சாது கருப்பு-கி.வீரமணி
திருநெல்வேலி:
காவியைப் பார்த்து கருப்பு ஒருபோதும் அஞ்சாது என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கீழப்பாவூரில் பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கி.வீரமணி கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீரமணி நிகழ்ச்சியில் பேசுகையில், சாதிக் கொடுமையை எதிர்த்து சமுதாய சீர்திருத்தைக் கொண்டு வந்தவர் பெரியார். சில வருடங்ளுக்கு முன்பு இங்கு நான் பேசியபோது கோவில் மணியோசையை எழுப்பி இடையூறு செய்தனர்.
காவிகளைப் பார்த்து கருப்பு ஒருபோதும் பயப்படாது. கருப்பைப் பார்த்து காவிதான் பயப்படுகிறது.
அன்று பெரியாரிடம் கடவுள் இல்லை என்கிறீர்களே, ஒருவேளை கடவுள் நேரில் உங்கள் முன் தோன்றினால் என்ன செய்வீர்கள் என்று ஒருவர் கேட்டார். அதற்குப் பெரியார், கடவுள் வந்தால், கடவுள் இருக்கிறார் என்பேன்.
தி.கவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் பெரியார் கருத்துக்களை ஏற்பவர்கள் இருக்கிறார்கள்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்து பெரியாரின் கொள்கையை நிறைவேற்றியவர் முதல்வர் கருணாநிதி. அரசை நாம் அனைவரும் கண் இமை போல போற்றிக் காக்க வேண்டும்.
அன்று சாதி என்ற பாம்பை பெரியார் அடித்தார். ஆனால் அந்தப் பாம்பு இப்போது கோவிலுக்குள் புகுந்து விட்டது. பெரியார் கொண்டு வந்த குருதிக் கொடைதான் சாதியை விரட்டியது. பெரியார் தமிழகம், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கேத் தலைவர் என்றார் வீரமணி.
பெரியார் சிலை திறப்பையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications