நெல்லை: 2 லாரிகள் மோதலில் ஆட்டோ சிக்கி 2 குழந்தைகள் பலி!
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே பள்ளிக்கூடம் எதிரே இரண்டு லாரிகள் மோதிக் கொண்டபோது பள்ளிக்குள்ளிருந்து குழந்தைகளுடன் வெளியே வந்த ஆட்டோ சிக்கிக் கொண்டதில் அதில் இருந்த இரு மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
நேற்று கும்பகோணம் தீவிபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீக்கு இரையானதன் 3வது ஆண்டு விழா அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நாளில், நெல்லை அருகே கோர விபத்தில் 2 பள்ளிக்குழந்தைகள் இறந்துள்ளனர்.
நெல்லை-மதுரை சாலையில், தாழையூத்து என்ற இடத்தில் வெங்கடசாமி நாயுடு மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடம் உள்ளது. இந்தத் தனியார் பள்ளி நேற்று மாலை முடிந்ததும், மாணவ, மாணவியர் ஆட்டோக்கள், பெற்றோர்களின் வாகனங்களில் வீடுகளுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
![]() |
இந்த பிசியான சமயத்தில், பள்ளிக் கூடத்திற்கு முன்பாக, சாலையில் நெல்லையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற லாரியும், தாழையூத்திலிருந்து நெல்லை நோக்கிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
அந்த சமயத்தில் மாணவர்களுடன் பள்ளியிலிருந்து வெளியே வந்த ஆட்டோ, நெல்லை நோக்கிச் சென்ற ஆட்டோவுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது.
லாரிகள் இரண்டும் மோதிக் கொண்டதில், நெல்லை நோக்கிச் சென்ற லாரி வேகமாக பின்னால் தள்ளப்பட்டது. அப்போது குழந்தைகளுடன் இருந்த ஆட்டோ, லாரிக்குள் சிக்கிக் கொண்டது. இது போதாதென்று, தாழையூத்திலிருந்து சிமென்ட் லோடு ஏற்றிக் கொண்டு வந்த இன்னொரு லாரியும் ஆட்டோ மீது மோதியது.
இரு லாரிகளுக்கு நடுவில் சிக்கிக் கொண்ட ஆட்டோவுக்குள் இருந்த குழந்தைகள் 17 பேரும் பயத்தில் அலறினர். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோவுக்குள் சிக்கிக் கொண்ட குழந்தைகளை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் மணிகண்டன் (4), வள்ளி (8) ஆகிய இரு குழந்தைகளும் உடல் நசுங்கி இறந்து போய் விட்டனர். கோமதி (8), மாலதி (8), சுப்புலட்சுமி, சுதாகர், வெள்ளைப்பாண்டி, கிஷோர்குமார், நாகராஜன், ஜெயேந்திர சிங், சிவனம்மாள், குமாரி, முத்து சுரேஷ், முத்துமாரி, கார்த்திக் உள்ளிட்ட 16 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய அனைத்துக் குழந்தைகளும் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்த விபத்தில் ஒரு லாரியின் டிரைவரும் பலியாகி விட்டார்.
பள்ளிக் குழந்தைகள் இருவர் கோர விபத்தில் பலியான தகவல் கேட்டதும் அமைச்சர் மைதீன்கான், எம்.எல்.ஏ வசந்தகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்து காயமடைந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.
நேற்றைய சம்பவத்தில் விபத்தில் சிக்கிய ஆட்டோவில் 20 குழந்தைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோ லாரிக்குள் முற்றிலும் சிக்கி நசுங்கியிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
இந்த கோர விபத்து தாழையூத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.













Click it and Unblock the Notifications