மூதாட்டியை அடித்த ரயில்வே ஊழியர்பயணிகள் ஆத்திரம் - ரயில் நிலையம் சூறை
சென்னை:சென்னை தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டருக்கு அருகே படுத்துக் கிடந்த 80 வயது மூதாட்டியை ரயில்வே ஊழியர் மரக் கட்டையால் அடித்து நொறுக்கினார். இதைப் பார்த்த பயணிகள் ஆத்திரமடைந்து ரயில் நிலையத்தை சூறையாடினர், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர்.
சென்னை புறநகரில் உள்ளது தாம்பரம் சானட்டோரியம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்கு அருகே பவுனம்மாள் என்கிற 80 வயது மூதாட்டி அமர்ந்திருப்பார். வேறு போக்கிடம் இல்லாததால் அந்தப் பாவப்பட்ட பாட்டி இந்த இடத்தில் அமர்ந்திருப்பார், படுத்துத் தூங்குவார்.
இந்த நிலையில் நேற்று மாலை, பவுனம்மாளிடம் வந்த டிக்கெட் கொடுக்கும் ஊழியரான வம்சிலி டேனியல், அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். ஆனால் சரியாக காது கேட்காததால், பவுனம்மாள் பேசாமல் அமர்ந்திருந்தார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த வம்சிலி டேனியல் அருகே கிடந்த மரக் கட்டையை எடுத்து தாறுமாறாக அந்த பாட்டியை அடித்து விளாசியுள்ளார். இதில் பவுனம்மாளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதைப் பார்த்த பயணிகள் ஓடி வந்து அந்த கொடூர ஊழியரிடமிருந்து பாட்டியை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பவுனம்மாளின் தலையில் 9 தையல் போடப்பட்டது.
பின்னர் மீண்டும் அவரை ரயில் நிலையத்திற்கே கொண்டு வந்து விட்டுச் சென்றனர். அப்போது அங்கு வந்த ரயில் பயணிகள் என்ன நடந்தது என்று கேட்க நடந்ததை மற்ற பயணிகள் கூறினர்.
உடனடியாக வம்சிலியிடம் போய் இப்படி அடித்துள்ளீர்களே என்று நியாயம் கேட்டனர். ஆனால் வம்சிலியோ, நியாயம் கேட்க வந்த பயணிகளிடம் தாறுமாறாக பேசித் திட்டியுள்ளார்.
அவ்வளவுதான் அத்தனை பயணிகளும் கொந்தளித்து விட்டனர். கைக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டு ரயில் நிலையத்தை தாக்கத் தொடங்கினர். டிக்கெட் கவுன்டரின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மின் விளக்குகளையும் அடித்து நொறுக்கினர். ரயில் நிலையமே போர்க்களம் போல மாறி விட்டது.
பொதுமக்களின் கோபத்தைப் பார்த்துப் பயந்து போன வம்சிலியும் பிற ரயில்வே ஊழியர்களும் டிக்கெட் கவுண்டரைப் பூட்டிக் கொண்டு உள்ளே போய் பதுங்கிக் கொண்டனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் பயணிகள் ரயில் நிலையத்தை சூறையாடினர்.
அப்போது அந்த வழியாக வந்த செங்கல்பட்டு ரயிலையும் மறித்து நிறுத்தி மறியல் போராட்டத்திலும் குதித்தனர். தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர்.
பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். ஊழியர் வம்சியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதேபோல வம்சிலி, பவுனம்மாளை தாக்கியபோது நேரில் பார்த்த 5 பயணிகளையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பாவப்பட்ட பவுனம்மாளை போலீஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications