து. ஜனாதிபதி: காங் வேட்பாளர் அன்சாரி,பாஜக வேட்பாளர் நஜ்மா மனு தாக்கல்
டெல்லி:துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும், பாஜக கூட்டணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் இன்று மனு தாக்கல் செய்தனர்.
துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.
![]() |
இத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் ஹமீத் அன்சாரி போட்டியிடுகிறார். 3வது அணியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ரஷீத் மசூத் போட்டியிடுகிறார்.
இவர்களில் ரஷீத் மசூத் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து விட்டார். இன்று அன்சாரி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் கடைசி நாளான இன்று மனு தாக்கல் செய்தார்.
அன்சாரி மனு தாக்கல் செய்தபோது அவருடன் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இடது சாரித் தலைவர்கள் உடன் இருந்தனர்.
நஜ்மா ஹெப்துல்லா மனு தாக்கல் செய்தபோது முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ேடார் உடன் இருந்தனர்.
இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது. இதையடுத்து நாளை மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26ம் தேதிக்குள் போட்டியிலிருந்து வாபஸ் பெற விரும்புவோர் மனுக்களைத் திரும்பப் பெறலாம். ஆகஸ்ட் 10ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.
இந்தத் தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 781 எம்.பிக்கள் உள்ளனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிக் கட்சிகளுக்கு 401 எம்.பிக்கள் உள்ளனர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 240 எம்.பிக்களும், 3வது அணிக்கு 81 எம்.பிக்களும் உள்ளனர். பிற எம்.பிக்கள் 59 பேர் ஆவர்.
3 அணிகளுமே தனி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரி வேட்பாளரான அன்சாரிக்குத் தான் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.
முன்னதாக நேற்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. இதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூடி ஆலோசித்தனர். இதன் இறுதியில் சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் வேட்பாளராக நஜ்மா ஹெப்துல்லா நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
அவர் கூறுகையில், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த ஆளுங்கட்சி கூட்டணி முயற்சிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை ஆளுங்கூட்டணி புறக்கணித்து விட்டது.
ஆளுங்கட்சி எங்களைப் புறக்கணித்த நிலையில், எங்களது வேட்பாளரை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
ராஜ்யசபா துணைத் தலைவராக நஜ்மா ஹெப்துல்லா திறம்பட பணியாற்றியுள்ளார். அனைத்துக் கட்சிகளின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
மற்ற இரு கூட்டணிகளும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தியதால் நாங்களும் முஸ்லீம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூற முடியாது. முற்றிலும் திறமையின் அடிப்படையில்தான் நஜ்மா ஹெப்துல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பதவிக்கு அவர் முற்றிலும் பொருத்தமானவர் என்றார் சுஷ்மா சுவராஜ்.
அத்வானி தயக்கம்-தலையிட்ட வாஜ்பாய்:
முன்னதாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நஜ்மாவின் பெயரை பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அத்வானி மட்டும் தயங்கியதாக தெரிகிறது. இருப்பினும் வாஜ்பாய் தலையிட்டு நஜ்மா பெயரை இறுதி செய்தார்.
67 வயதாகும் நஜ்மா, மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்ட வீரர் மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் பேத்திதான் நஜ்மா. 1980ம் ஆண்டு முதல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்து வருகிறார். ராஜ்யசபா துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த நஜ்மா, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பாஜகவில் இணைந்தார்.













Click it and Unblock the Notifications