விடுதலை கோரும் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி
சென்னை:ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு வேலூர் சிறையில் கடந்த 16 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள பி.ஆர்.ரவிச்சந்திரன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். 36 வயதாகும் ரவிச்சந்திரன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
16 ஆண்டுகளாக சிறையில் வாடி வரும் தன்னை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த 3 பேர் கொண்ட பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த ஒரு நீதிபதி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் மற்ற இருவரும் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் தன்னை விடுவிக்க கோரி கடந்த வாரம் வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார் ரவிச்சந்திரன்.
இதற்கிடையே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என மீண்டும் ரவிச்சந்திரன் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கோரிக்கை கடிதத்தில்,
சிபிஐ விசாரித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் என்ற ஒரே காரணத்துக்காக நான் விடுதலை செய்யப்படாமல் உள்ளேன்.
ஆனால் 10 ஆண்டுகளை சிறையில் கழித்த 472 பேரும், 14 ஆண்டுகளைக் கழித்த 27 பேரும் வேலூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் 16 ஆண்டுளாகியும் கூட, எந்தவிதமான கெட்ட பெயரையும் எடுக்காமல் நன்னடத்தையுடன் உள்ள போதிலும் என்னை விடுதலை செய்யாமல் உள்ளனர்.
எனவே என்னை உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே சிறையில், ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, உள்ளிட்ட 3 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் நளினி தன்னை விடுவிக்கக் ேகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தள்ளார். இந்த வழக்கு நீதிபதி தனபாலன் முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.












Click it and Unblock the Notifications