சேது சமுத்திர திட்டத்தை தடுப்பவர்கள்முட்டாள்கள்-திட்ட இயக்குனர் பாய்ச்சல்!
சென்னை: தமிழகத்தின் நீண்ட கால கனவான சேது சமுத்திரத் திட்டத்தை தடுப்பவர்கள் முட்டாள்களாகத்தான் இருப்பார்கள் என்று தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகத் தலைவரும், சேது சமுத்திரத் திட்ட இயக்குனருமான ரகுபதி ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் சேது சமுத்திரத் திட்டம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் பேசிய ரகுபதி பேசுகையில், 1996ம் ஆண்டு பாப்புலர் டிரான்ஸ்போர்ட் கன்ஸல்டன்ஸி சர்வீஸ் என்ற நிறுவனம் சேது சமுத்திரம் பற்றிய ஆய்வுக் கட்டுரையை மத்திய அரசிடம் கொடுத்தது. அதன்படி 2005ல் சேது சமுத்திரத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுமா என தேசிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தால் மீனவத் தொழில் பாதிக்குமா, மீனவர்கள் பாதிக்கப்படுவார்களா, பொருளாதார ரீதியாக சாத்தியமா என தீவிரமாக ஆராய்ந்து தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே கடந்த 2003ம் ஆண்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் உட்பட ஆறு கடலோர மாவட்டங்களில் 14 முறை பொது மக்களின் கருத்தை அறிய கூட்டத்தை கூட்டி இந்த திட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கியுள்ளோம்.
அதே போல் 2004ம் ஆண்டு ராமநாதபுரத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் 80 வயது முதியவர் ஒருவர், திட்டம் செயல்படுத்திய பின்பு கடலில் நீரோட்டம் எப்படி இருக்கும் எனக் கேட்டார்.
அவரது கருத்தை மதித்து ரூ. 27 லட்சம் செலவில் வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியோடு நீரோட்ட ஆய்வும் மேற்கொண்டோம்.
தொண்டியில் சிறியக் கப்பல்கள் நிற்க ரூ.16 கோடியில் தளம், முத்துப்பேட்டை, தனுஷ்கோடியில் மீனவர்களுக்காக மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணிகளையும் செய்து வருகிறோம்.
இத்தனையையும் நாங்கள் ஒன்றையும் ஆராயாமல் செய்யவில்லை. பொது மக்கள் உட்பட அனைத்துத் துறையினரின் ஆலோசனைகளையும் பெற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
நாங்கள் முறைப்படி செய்யும் வேலைகள் சரியாக இருப்பதால், இந்த திட்டத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டு அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் பலரை என்னவென்று சொல்வது?
உமாபாரதி மத்திய அமைச்சராக இருக்கும் போது தொல் பொருள் ஆராய்ச்சித் துறையினர், ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் இருக்கிறதா, இல்லையா என ஆய்வு மேற்கொண்டனர். அதில் பாலம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை எனத் தெரிய வந்தது. அப்படியிருந்தும் இந்த திட்டத்தை தடுப்பதற்காக உண்ணாவிரதம் இருப்பவர்களை என்னவென்று சொல்வது?
சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் முட்டாளாகத்தான் இருப்பார்கள் என ஆவேசமாக கூறினார் ரகுபதி.
தனது இந்த பேச்சின் மூலம் அடுத்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் ரகுபதி.












Click it and Unblock the Notifications