நடுக்கடலில் தலைகீழாக கவிழ்ந்த படகு.. வியட்நாமில் உயிரிழந்த இந்தியர்கள்! பிரதமர் மோடி இரங்கல்!
டெல்லி: வியட்நாமில் இந்தியர்களை சுற்றுலா அழைத்துச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்ததில் இந்தியர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வியட்நாமின் ஃபூ குவோக் அருகே இந்தியர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். எங்கள் தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றன. எங்கள் அதிகாரிகள் வியட்நாம் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்" என்று பதிவிட்டிருக்கிறார்.
முதல்வர் விஜய்
அதேபோல முதலமைச்சர் விஜய் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்.
இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக்கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.
இந்த படகில் தமிழர்கள் சிலரும் பயணித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழர்கள் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, நிலைமையை அறிந்துக்கொள்ள வியட்நாம் அரசு உதவி எண்களை அறிவித்திருக்கிறது.
வியட்நாமில் என்ன நடந்தது?
வியட்நாமின் தெற்கு பகுதியில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா தளமான 'பூ குவோக்' தீவு பகுதிக்கு இந்தியர்கள் சிலர் இன்று சுற்றுலா சென்றிருக்கிறார்கள். இவர்கள் பயணித்த 'ஓஷன் பியர் ஐலேண்ட்' நிறுவனத்திற்கு சொந்தமான படகு, 32 பேர் மட்டுமே பயணிப்பதற்கானதாகும். ஆனால், 40க்கும் அதிகமானவர்கள் படகில் பயணித்திருக்கின்றனர். படகு மதியம் 1 மணியளவில் 'ஹான் மே ராட்' தீவிலிருந்து 'அன் தோய்' துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தது. கரைக்கு சுமார் 400 மீ தூரம் இருந்த நிலையில், திடீரென படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
கடல் சீற்றம் மற்றும் பெரிய அலைகள் வீசியதால் படகு சமநிலையை இழந்து கவிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த படகில் தமிழர்கள் சிலர் பயணித்திருந்தனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 8 தமிழர்கள் வரை உயிரிழந்திருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications