செயற்கை மழைக்கு ரெடியாகும் கர்நாடகா.. மோசமான நிலைமையால் மாற்று யோசனை.. தமிழகத்துக்கு ‘ஜாக்பாட்'?
பெங்களூர்: கர்நாடகாவில் பருவமழை பொய்த்துப்போய் உள்ளது. இதனால் கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது.தமிழகத்துக்கு காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீரும் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் தான் நிலைமை மோசமாகி வருவதால் கர்நாடகாவில் செயற்கை மழை பெய்ய வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கை மழை என்பது என்ன? எப்படி செயற்கையாக மழையை கொண்டு வர முடியும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கர்நாடகாவில் போதிய அளவுக்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் கேஆர்எஸ் அணை மட்டுமின்றி காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்ட நிலையில் உள்ளன. சில நாட்களாக மட்டும் தான் லேசாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் அணையில் உள்ள தண்ணீர் அடிமட்டத்தை நோக்கி செல்கிறது. கர்நாடகா அரசு சார்பில் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகளில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு மட்டுமே பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
இதனால் விவசாயிகள் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் காவிரி ஆற்றால் பலன் பெற்று வரும் மைசூர், மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தண்ணீர் இருப்பு பற்றி கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த சமயத்தில் தான் கர்நாடகாவில் செயற்கை மழை பெய்ய வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
''கர்நாடகாவில் இன்னும் 3 முதல் 4 மாதங்கள் வரை குடிநீர் பிரச்சனை வர வாய்ப்புள்ளது. ஆனால் விவசாயத்துக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை உள்ளது. விவசாய பயிர்களின் எதிர்கலம் என்பது வரக்கூடிய நாட்களில் பெய்யக்கூடிய மழையை பொறுத்து தான் அமையயும் சூழல் உள்ளது. கர்நாடகாவில் இதற்கு முன்பு 2 முறை செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் எச்கே பட்டீல் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக இருந்தபோது செயற்கை மழை பெய்ய வைக்கப்பட்டது.
அதன்பிறகு சமீபத்தில் ராணிபென்னூர் எம்எல்ஏ பிரகாஷ் கோலிவாட் ஹாவேரியில் செயற்கை மழை பெய்ய ஏற்பட்டுள்ளது. செயற்கை மழைக்கு மேகங்களின் உருவாக்கம் அவசியமாகும். இதுதொடர்பாக எக்ஸ்பர்ட்டுடன் ஆலோசனை மேற்கொள்ள தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி அதிகாரிகளிடம் நான் கேட்டுள்ளேன்.'' என்று கூறியுள்ளார்.
செயற்கை மழையை ஆங்கிலத்தில் cloud Seeding என்பார்கள். ஈரப்பதம் நிறைந்த மேகங்களில் வேதிப்பொருட்களை தூவி செயற்கையாக மழையை உருவாக்குவது தான் இந்த முறை. அதன்படி சில்வர் அயோடைட் எனும் வேதி பொருள் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. மழைத்துளிகள் உருவாக குறைவான ஈரப்பதம் இருக்கும் மேகங்களில் இந்த சில்வர் அயோடைட் விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் தூவப்படும். அதன்பிறகு வேதியியல் மாற்றம் நிகழும். மேகத்தில் உள்ள நீர்த்துளிகளை ஒன்றாக்கி சில்வர் அயோடைட் மழையை தரும். இதுதான் செயற்கை மழையாகும்.
பொதுவாக செயற்கை மழை 2 விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று வறட்சியை போக்குவதற்கு, இன்னொன்று காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு செயற்கை மழை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த செயற்கை மழையை உருவாக்க வேண்டும் என்றால் மழைத்துளியை உருவாக்கும் மேகங்கள் அவசியம். இதனால் எக்ஸ்பர்ட்டுடன் ஆலோசித்து தான் இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஒருவேளை கர்நாடகாவில் செயற்கை மழையை உருவாக்கும்போது அதற்கு அதிகப்படியான பலன் கிடைத்தால் காவிரிக்கு தண்ணீர் வரும் அணைகளின் நீர்மட்டம் அதிகரிக்கும். இது தமிழகத்துக்கு குட்நியூஸாக பார்க்கப்படும்.












Click it and Unblock the Notifications