ஐஆர்சிடிசிக்கு விரைவில் புதிய வெப்சைட்.. பட்டைய கிளப்ப போகும் 4 புதிய அம்சங்கள்! பயணிகளுக்கு ஹேப்பி
சென்னை: ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதில் பயணிகளுக்கு உள்ள சிரமங்களை களைந்து, எளிதாகவும் விரைவாகவும் டிக்கெட் புக் செய்யும் வகையில் சில புதிய அப்டேட்களை ரயில்வே கொண்டு வர உள்ளது. பயணிகள் நீண்ட நாள் எதிர்பார்த்த சில முக்கிய மாற்றங்கள் புதிய வெர்ஷனில் கொண்டு வரப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. கேப்சா நீக்கம், பயணிகள் விவரங்கள் சேமித்து வைப்பது உள்ளிட்ட மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.
இந்தியாவில் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து அமைப்பாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ரயில்களில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார்கள். ரயில்வேயில் டிக்கெட் புக்கிங் செய்ய தற்போது பெரும்பாலும் பயணிகள் ஐஆர்சிடிசி இணையதளத்தையே பயன்படுத்துகிறார்கள். கவுண்டர்களில் போய் டிக்கெட் எடுக்கும் பழக்கம் பயணிகள் இடையே கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.

ஐஆர்சிடிசி செயலி: பயணிகள் புகார்
ஐஆர்சிடிசியில் டிக்கெட் எடுக்கும் பயணிகள் அதிகரிக்க தொடங்கியிருக்கக் கூடிய நிலையில் ரயில் பயணிகள் முன்வைக்கும் பெரிய குற்றச்சாட்டு என்னவென்றால், டிக்கெட்டுகள் பல நேரங்களில் கிடைப்பது இல்லை என்பதுதான். குறிப்பாக தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது பேமேண்ட் செலுத்திய உடனே எரர் வந்துவிடுகிறது. டிக்கெட் எதுவும் கிடைப்பது இல்லை என்றே பயணிகள் பலரும் முன்வைக்கும் புகாராக உள்ளது.
4 முக்கிய மாற்றங்கள்
இந்த சூழலில்தான் ஐஆர்சிடிசி விரைவில் புதிய அம்சங்களுடன் இணையதளத்தை அப்டேட் செய்ய உள்ளது. இன்னும் சில மாதங்களில் இது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் ஆகியவற்றின் அதிகாரிகள், எம்.என்.ஐ.டி. கல்வி நிறுவன மாணவர்களைச் சந்தித்து, புதிய இணையதளத்தின் பீட்டா வெர்ஷனின் செயல்முறை விளக்கத்துடன் அறிமுகப்படுத்தினர்.
புதிய பீட்டா பதிப்பு அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், அதில் தேவையான மேம்பாடுகளைச் செய்யும் நோக்கில் மாணவர்களிடமிருந்து கூடுதல் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் அதிகாரிகள் பெற்றனர். ரிசர்வேசன் அமைப்பும் முழுமையாக மாற்றி அமைக்கப்பட்ட பிறக், ஐஆர்சிடிசி இணையதளம் பயன்பாடுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 4 முக்கிய மாற்றங்கள் கொண்டு வர ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
கேப்சாக்கள் நீக்கம்:
ஐஆர்சிடிசியின் புதிய இணையதளத்தில் தேவையற்ற கேப்சாக்கள், பாப் அப்ஸ்கள், கிராபிக்ஸ்கள் என கவனத்தை திசை திருப்பும் சில அம்சங்கள் நீக்கப்பட உள்ளன. பயனர்கள் எளிதாக பயன்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது
இருக்கை விவரம்:
ரயிலில் இருக்கை விவரத்தை பயணிகள் தேடும் போது, அனைத்து வகுப்புகளில் எத்தனை சீட்கள் காலியாக உள்ளன என்ற விவரம் காட்டும்.
விரைவான முன்பதிவு:
டிக்கெட் புக்கிங் செய்யும் போது கேட்கப்படும் தேவையற்ற விவரங்கள் நீக்கப்பட்டு விரைவாக புக்கிங் செய்யும் வசதி கொண்டு வரப்படும். அதாவது பல்வேறு ஸ்டெப்ஸ்கள் தற்போது டிக்கெட் புக்கிங்கில் இருக்கிறது. இவற்றை நீக்கிவிட்டு சில வினாடிகளில் புக் செய்யும் வகையில் எளிதாக மாற்றி அமைக்கப்படும்.
மறுபுக்கிங்:
பயணிகள் தங்கள் விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் பயணிகள் ஒவ்வொரு முறையும் முழு விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டியது இருக்காது.














Click it and Unblock the Notifications