அர்ஜூன் சிங் குடும்பம் மீது வரதட்சணை கொடுமை வழக்கு
லக்னோ:மத்திய மனித வள அமைச்சர் அர்ஜூன் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பேரனின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் உ.பி. போலீஸார் வரதட்சணைக் கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கின் மகன் வழிப் பேரன் அபிஜித். இவரது மனைவி பிரியங்கா சிங். பிரியங்கா சிங்கின் தந்தை மணவேந்திர சிங், நரேலி ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர்.
சமீபத்தில் அர்ஜூன் சிங் குடும்பத்தினர் மீது பிரியங்கா சிங் போலீஸில் வரதட்சணைப் புகார் கொடுத்தார். அதில், நொய்டாவில் சொகுசு பங்களா மற்றும் ஆடம்பரக் கார் ஆகியவற்றை வாங்கி வருமாறு அர்ஜூன் சிங், அவரது மனைவி, கணவர் அபிஜித், அவரது தாயார் ஆகியோர் கொடுமைப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இந்தப் புகாரை போலீஸில் ஏற்கவில்லை. இதையடுத்து மொராதாபாத் நீதிமன்றத்தை அணுகினார் பிரியங்கா. நீதிமன்றம் பிரியங்காவின் புகாரைப் பதிவு செய்து விசாணை நடத்துமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து இன்று அர்ஜூன் சிங், அவரது மனைவி, மகன் அபிமன்யூ சிங், மருமகள் பீனா சிங், மனைவியின் சகோதரி ஆராதனா சிங், பேரன் அபிஜித், மைத்துனர் திலீப் சிங், அவரது மகள் மந்தாகினி சிங் ஆகியோர் மீது மொராதாபாத் மாவட்டம் சந்துசாய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications