வந்தனா ஸ்டைல்-கணவர் வீட்டில் குடியேறிய பெண்
சென்னை:நடிகர் ஸ்ரீகாந்த், வந்தனா விவகாரம் போலவே சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. வந்தனா ஸ்டைலில் தனது காதல் கணவர் வீட்டில் புகுந்து இளம் பெண் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூவேந்தன். இவர் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பழைய பொருட்களை எடுத்துச் சென்று விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த செளம்யா என்பவருக்கும், மூவேந்தனுக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டினர். மேலும் திருமணத்தையும் நிச்சயம் செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
அதன் பிறகு காதல் ஜோடிகள் படு சுதந்திரமாக சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது. இந்த நிலையில்தான் புதுத் திருப்பம் ஏற்பட்டது. செளம்யாவின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் குடியிருந்தபோது அவரது தாயார் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்னும் முடியாமல் நிலுவையில் உள்ளது.
இந்த விவகாரம் மூவேந்தன் குடும்பத்திற்குத் தெரிய வந்தது. இதையடுத்து திருமணத்தை மூவேந்தன் குடும்பம் தள்ளி வைத்தது. இதனால் செளம்யாவின் குடும்பம் அதிர்ந்தது. இதுதொடர்பாக பிரச்சினை நிலவியது.
ஆனால் இந்தக் களேபரங்களைக் கண்டுகொள்ளாமல், மூவேந்தனும், செளம்யாவும் தங்களது காதலைத் தொடர்ந்தனர். இப்படியே இருந்தால் கல்யாணத்தை நடத்த விடாமல் இருவரது குடும்பமும் தடுத்து விடக் கூடும் என்பதால், கடந்த ஏப்ரல் 11ம் தேதி ரகசியத் திருமணம் செய்து கொண்டனர்.
இதை அறிந்த இரு வீட்டாரும் சண்டையை விட்டு சமாதானமடைந்தனர். பின்னர் மே 5ம் தேதி திருமண வரவேற்பை நடத்தினர். செளம்யாவும் காதல் கணவரைக் கைப்பிடித்த சந்தோஷத்துடன் புகுந்த வீட்டில் குடியேறினார்.
குடும்பம் குதூகலமாக போய்க் கொண்டிருந்த நிலையில், செளம்யாவின் வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசத் தொடங்கியது. யாரோ ஒருவர் அடிக்கடி செளம்யாவுக்கு போன் செய்துள்ளார். இதனால் மூவேந்தன் சந்தேகமடைந்தார். மனைவியை துன்புறுத்தத் தொடங்கினார். இதனால் செளம்யா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்குப் போய் விட்டார்.
இந்த நிலையில்,செளம்யாவிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி செளம்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைப் பார்த்த செளம்யா அதிர்ச்சி அடைந்தார்.
ஆவேசமடைந்த அவர் தனது தாயார் வீட்டிலிருந்து கிளம்பி மூவேந்தன் வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் நுழைந்த அவர் வந்தனாவைப் போல நானும் போராடப் போகிறேன். எப்படி என்னை டைவர்ஸ் செய்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என்று கூறியபடி வீட்டுக்குள் போராட்டத்தைத் தொடங்கினர்.
இதைப் பார்த்த மூவேந்தன் அதிர்ச்சி அடைந்தார். ஸ்ரீகாந்த் ஸ்டைலில் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடத்தில் தங்கியுள்ளார். இதற்கிடையே செளம்யா அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீஸார் இருவரையும் அழைத்துப் பேசிப் பார்த்தனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
செளம்யாவின் போக்கால் பெரும் குழப்பமடைந்துள்ள மூவேந்தன், அவரை எப்படி வீட்டை விட்டு வெளியேற்றுவது என்று வழக்கறிஞர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம்.












Click it and Unblock the Notifications