ரயில் மறியல் செய்தால் கடும் நடவடிக்கை - வேலு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:ரயில் மறியல் செய்வது, தண்டவாளத்தில் அமருவது என பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், கடும் நடவடிக்கை எடுப்போம் என மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக ரயில் பயணிகள் சொல்லொணா துயரத்தை சந்தித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை சென்டிரல், அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயிலில் பயணம் செய்வோர் பெரும் அவஸ்தையை சந்தித்து வருகிறார்கள்.


குறிப்பிட்ட நேரத்திற்கு ரயில்கள் வருவதில்லை. ரயில்களின் நேரத்தை, அதிகாரிகள் திடீர் திடீரென மாற்றியமைத்து வருகின்றனர்.

இதனால் ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் இதுவரை நான்கு முறை போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டனர்.

இந் நிலையில் புண்ணை நோண்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பது போல, சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில், கடந்த 3 நாட்களில் 2 முறை ரயில் தடம்புரண்டு பெரும் சிரமத்தை பயணிகளுக்குக் கொடுத்தது.

அதிலும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த நாட்களில் ரயில்கள் தடம் புரண்டதால் சென்டிரல் ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.


குழந்தைகள், பெண்களுடன் வெளியூர்களுக்குப் போக வந்திருந்த பயணிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள். இரவில் பல மணி நேரம் ரயில் நிலையத்திலேயே கூட்டம் கூட்டமாக தூங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று சென்டிரல் ரயில் நிலையத்திற்கு அமைச்சர் வேலு வந்தார். அங்கு 2 ரயில்கள் தடம் புரண்ட பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பேசின் பிரிட்ஜ் யார்டிலிருந்து சென்டிரல் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் கொண்டு வரப்படும்போது தடம் புரளும் சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுதொடர்பாக ரூ. 300 கோடி மதிப்பில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இது நிறைவேறினால் இதுபோன்ற பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

அதேசமயம், பயணிகள் ரயில் மறியல் செய்வது, தண்டவாளத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்துவது போன்றவற்றை அனுமதிக்க முடியாது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பல வழிகள் உள்ளன. யாருக்கும் ரயிலை நிறுத்த உரிமை இல்லை. இனிமேல் இதுபோன்ற போராட்டங்களை அனுமதிக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வேலு.

டாக்டர் அய்யா கேட்டுகுங்க..

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற