தமிழில் கேட்டால் ஆங்கிலத்தில்பதிலளிக்கும் அன்புமணி - எம்.பி புகார்
தென்காசி:நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்டால் அதற்குத் தமிழில் பதிலளிக்காமல் ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி என்று தென்காசி தொகுதி எம்.பி. அப்பாத்துரை புகார் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் எம்.பி., தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் அப்பாத்துரை எம்.பி செங்கோட்டை மேலூர் உயர்நிலைப்பள்ளிக்கு ரூ. 5 லட்சமும், பூலாங்குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி கூடுதல் கட்டிட பணிகளுக்கு ரூ.5 லட்சமும் வழங்கினார்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில், அப்பாத்துரை எம்.பி பேசுகையில், நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி கேட்கலாம்.எய்ட்ஸ் குறித்து நான் தமிழில் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்.
தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழரின் மேம்பாட்டிற்காகவும் அல்லும், பகலும் பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி இதுபோல் நடந்து கொண்டது எனக்கு அதிர்ச்சி அளித்தது.
அவர் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்ளட்டும். ஆனால் தமிழில் கேள்வி கேட்பவர்களுக்கு தமிழிலேயே பதில் அளிக்குமாறு அன்புமணிக்கு ராமதாஸ் அறிவுறுத்த வேண்டும் என்றார் அப்பாதுரை.












Click it and Unblock the Notifications