காவிரியில் பெரும் வெள்ளம்-1000 குடிசைகள் மூழ்கின
சேலம்:மேட்டூர் அணையிலிருந்து 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் ஆற்றை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சுமார் 1000 குடிசைகள் நீரில் மூழ்கிவிட்டன.
கர்நாடகத்தில் மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதையடுத்து ஏற்கனவே நிரம்பியுள்ள கபிணி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து அதிக அளவிலான தண்ணீர் மேட்டூர் அணைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டில் 2வது முறையாக நேற்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியைத் தாண்டி 122.43 அடியை எட்டியது. இன்று பிற்பகல் அணையின் நீர் மட்டம் 123 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 1 லட்சத்து 17 ஆயிரத்து 530 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையிலிருந்து 1 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையடுத்து காவிரி டெல்டா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களுக்கு 2 வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் குடிசைகளுக்குள் நீர் புகுந்தது.
இதையடுத்து அங்கு வசித்து வருவோர் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு-1000 குடிசைகள் மூழ்கின:
இந் நிலையில் ஈரோடு மாவட்டத்தின் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள 1000 குடிசை வீடுகள் நீரில் முழுவதும் மூழ்கிவிட்டன.
கரையோர பகுதிகளான சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, படவல் கால்வாய், காடப்பநல்லூர், கிருஷ்ணம்பாளையம், ஈரோடு, கொடுமுடி, கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் காவிரி கரையோரங்களில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன.
இப் பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதால், இந்த வீடுகளில் இருந்தவர்கள் நகராட்சி கட்டிடங்கள், சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானியிலும் வெள்ளப்பெருக்கு
அதே போல பவானி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 17,819 அடி கன நீர் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அந்த அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பவானி சாகர் அணை திறக்கப்பட்டு அந்த நீர் கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது.












Click it and Unblock the Notifications