நாளை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பம்: இடி-மழை இருக்கும்!!
டெல்லி:பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம், கோவாவில் பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்தது,
நந்திகிராம் டாடா சிறப்பு பொருளாதார மண்டல விவகாரம், நெல்லை டாடா தொழிற்சாலை விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகள பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கிளப்பவுள்ளன.
முக்கியமாக அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தான் பிரளயத்தைக் கிளப்பவுள்ளது. இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் என பாஜகவும், மத்திய அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அறிவித்துவிட்டன.
மூன்றாவது அணியும் கடுமையாக எதிர்க்கிறது. இதனால் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் தரப் போவதாக பிரதமர் அறிவித்துள்ளார். அவரை கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுத்த எதிர்க் கட்சிகளும் இடதுசாரிகளும் திட்டமிட்டுள்ளன.
மேலும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வட மாநிலங்கள் முழுவதும் வெள்ளதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இங்கு நிவாரணப் பணிகள் சரிவர நடக்கவில்லை. இந்தப் பிரச்சனையும் வெடிக்கவுள்ளது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என 184வது பிரிவின் கீழ் பாஜக கோரவுள்ளது.
ஆனால், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாத நிலையில் ஓட்டெப்பு நடத்தினால் பாஜக-3வது அணி கூட்டணி தான் வெல்லும்.
இதனால் அரசே கவிழும் நிலை உருவாகும். இதையடுத்து ஓட்டெப்பு நடத்துவதில்லை, வெறும் விவாதம் மட்டுமே நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து பாஜக, மூன்றாவது அணி ரகளையில் இறங்கலாம் என்பதால் இந்த மழை காலக் கூட்டத் தொடரில் இடி-மின்னல் அதிகமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications