இலவச கலர் டி.வி வெளிச் சந்தையில் படு ஜோர் விற்பனை!
தென்காசி:நெல்லை மாவட்டத்தில் தமிழக அரசின் இலவச கலர் டிவி பெட்டிகள் வெளிச் சந்தையில் படு ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தலில் அறிவித்த வாக்குறுதிப்படி அனைவருக்கும் இலவச கலர் டி.வி வழங்கும் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.
திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் பல்வேறு சர்ச்சைகள் உருவானது. கலர் டி.வி வாங்கிய பலர் அதனை விற்பதாகவும், எலக்ட்ரானிக் கடைகளிலும் இந்த டி.வி கிடைப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
குறிப்பாக நெல்லை மாவட்டத்தில்தான் இவை விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் பின்னர் சற்றே இது அடங்கியிருந்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பல கிராமங்களில் அரசின் இலவச கலர் டி.வி விற்பனைக்கு வந்துள்ளது. இலவச டிவிக்களை வாங்கும் கிராம மக்கள் அதை ரூ. 1500 முதல் 2000 ரூபாய் வரைக்கும் விற்று வருகின்றனர்.
தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுரண்டை பகுதியில் இலவச கலர் டிவிக்கள் வெகுஜோராய் விற்பனை நடந்து வருவது பட்டவர்த்தனமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிகாரிகள் தலையிட்டு தடுத்தால் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுவது தவிர்க்கப்படும்.












Click it and Unblock the Notifications