டாடா ஆலைக்கு விஜயகாந்த் ஆதரவு
திருநெல்வேலி:மக்களுக்குப் பயன் தரும் திட்டம் என்று அரசு கருதினால் தாராளமாக டாடாவின் டைட்டானியம் டை ஆக்சைடு நிறுவனத்தை தொடங்கலாம். ஆனால் தேவைப்படும் நிலங்களை டாடா நிறுவனமே மக்களை நேரடியாக அணுகி வாங்கிக் கொள்ள வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் டைட்டானியம் டை ஆக்ஸைடு நிறுவனத்தினை 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த ஆலை அமைவதற்கு எதிர்ப்பும்-ஆதரவும் இருந்து வரும் நிலையில் பல அரசியல் கட்சி தலைவர்களூம் முகாமிட்டு இப்பகுதி மக்களிடம் கருத்தாய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நேற்று காலை எட்டையபுரம் வழியாக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், குட்டம் ஆகிய பகுதிகளுக்கு வந்தார். சாத்தான்குளத்தில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை சார்பில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் ஆலை அமைக்கலாம்.இந்த ஆலை அமைவது என்பது முழுக்க முழுக்க மக்களின் முடிவுதான்.
மக்களின் நிலங்களை அரசு கையகப்படுத்தி டாடா நிறுவனத்திற்கு வழங்க கூடாது. டாடா நிறுவனமும் தேவையான நிலங்களை மக்களிடம் இருந்து விலை கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும். மக்கள் கூறும் விலைக்கு அவர்களே நிலத்தை வாங்கிக் கொள்ளட்டும். அப்போதுதான் உரிய தொகை மக்களை சென்றடையும்.
இத்திட்டம் செயல்படுத்தப்படும்போது நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும். மேலும் வீட்டு வசதி. மருத்துவ வசதி, சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும்.
இதுகுறித்தெல்லாம் அரசு முன்கூட்டியே பேசியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை வந்திருக்காது.
டைட்டானியம் ஆலை அமைக்க தேவைப்படும் தேரி நிலங்களை பார்வையிட்டேன். மக்களின் பிரச்சனைகாகத்தான் நான் இங்கு வந்துள்ளேன் என்றார் விஜயகாந்த்.
அப்போது நிருபர்கள், ஆளும் கட்சி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இங்கு ஆய்வுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு கூட்டணி கட்சிகளுக்கு உரியது போய் சேரவில்லை. எல்லோருமே சுயநலத்திற்காக வருகிறார்கள்.
அவர்களுக்குள்ளேயே கூட்டணி போராட்டம் நடக்கிறது. அதற்குள் நான் நுழைய விரும்பவில்லை.
எந்த தொழிற்சாலைக்கும் தேமுதிக எதிரி இல்லை. எங்களது தேர்தல் அறிக்கையிலேயே மாவட்டத்திற்கு ஒரு தொழிற்சாலை அமைய வேண்டும் என்று சொல்லியுள்ளோம். மேலும் தமிழகத்தில் எத்தனை புதிய கட்சிகள் வேண்டுமானாலும் வரட்டும். மக்களுக்கு அக்கட்சிகள் நன்மை செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.
பின்னர் குட்டம் கிராமத்திற்கு வந்த விஜயகாந்த் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் கருத்து கேட்டார். மக்களிடம் மைக்கைக் கொடுத்து கருத்துக்களைக் கேட்டார்.
பின்னர் பொதுமக்களிடையே அவர் பேசுகையில், பிற கட்சியினரைப் போல் ஆள் வைத்து ஆராயவில்லை.
பொது மக்கள் விசயத்தில் அரசியல் சார்புடன் கருத்து கேட்க நான் விரும்பவில்லை. மேலும் கூட்டணி சேர்ந்து வரவும் தயாரில்லை. மக்களிடம் என் கருத்துக்களை கூறி விட்டேன்.
நான் விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும், தொழிலாள தோழர்களுக்கும் பாதுகாப்பாய் இருப்பேன். எனது அறிக்கையிலேயே அதை தெளிவாக கூறியுள்ளேன். எனக்கு மற்ற கட்சியைப் செயல்பட பிடிக்காது. மற்ற கட்சிகள் அரசியல் சுய லாபத்தோடு வருகிறார்கள்.
எதற்காகவும் நான் கவலைப்படவில்லை. மக்கள் பிரச்சனைகளை பேச ஆள் இல்லை. அதற்காகதான் நான் வந்துள்ளேன். மக்கள் கருத்துக்களை அரசு முடிவு செய்ய வேண்டியது அவசியம் என்றார் விஜயகாந்த்.
பின்னர் நெல்லை வந்த விஜயகாந்த் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த தொழிற்சாலை விவகாரத்தில் அரசியல் விளையாடி வருகிறது. சிலர் ஆட்களை அனுப்பி வைத்து கேள்வி கேட்க வைக்கின்றனர்.
தொழிற்சாலை வரவே கூடாது என்று நான் கூற மாட்டேன். மாவட்டந்தோறும் தொழிற்சாலை வேண்டும் என்பதுதான் எனது கட்சியின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமே.
எனவே மக்களுக்குப் பயனளிப்பதாக இருந்தால் இந்தத் தொழிற்சாலை வரட்டும். இந்தத் தொழிற்சாலையால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் உயருகிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.
தொழிற்சாலை தொடங்க டாடா வந்தாலும் சரி, பிர்லா வந்தாலும் சரி, இல்லை வைகுண்டராஜன் வந்தாலும் சரி, மக்களின் எதிர்கால வாழ்க்கைக்குப் பாதுகாப்பாக அந்தத் திட்டம் இருக்கிறதா என்பதைத்தான் முக்கியமாக பார்க்க வேண்டும். அதுதான் தேமுதிகவின் நிலை.
முதலில் தொழிற்சாலை வேண்டாம் என்று மக்கள் கருதினர். இப்போது அவர்களது நிலையில் மாற்றம் தெரிகிறது. நிலங்களை கையகப்படுத்துவதில் அரசு தலையிடுவது கூடாது. டாடா நிறுவனமே நேரடியாக மக்களிடம் பேசி நிலங்களை வாங்கிக் கொள்ளட்டும்.
எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பயனளிக்கும் திட்டத்தை வரவேற்போம் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications