கைகோர்த்த பாஜக-இடதுசாரிகள்: நொந்து போன காங்கிரஸ்
டெல்லி:அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுடன் இன்று இடதுசாரிக் கட்சிகளும் கைகோர்த்துக் கொண்டு அரசை மிகக் கடுமையாக விமர்சித்தன. இதனால் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தனித்துவிடப்பட்டது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடாவிட்டால் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெறவும் தயங்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஏ.பி.பர்தான் கூறியுள்ளார்.
இதை சாதாரண மிரட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தை இடதுசாரி கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும் பிரதமர் இதில் உறுதியாக உள்ளார்.
பிரதமர் கொடுத்த தவறான தகவல்-அத்வானி
இந் நிலையில் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக லோக்சபாவில் தவறான தகவல் தந்ததாக பிரதமர் மீது பாஜக உரிமைப் பிரச்சனை கொண்டு வந்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்திற்கு பின், அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பிரச்சனையை அத்வானி கிளப்பினார். அவர் பேசுகையில்,
அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு பல வழிகளில் சாதகமாக உள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தவறான தகவல் அளித்து விட்டார்.
அணு ஒப்பந்தத்தில் உள்ள ஹைட் பிரிவின்படி இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த தடை விதிக்கப்படலாம் என்றார்.
இதற்கு பதிலளித்த பிரணாப் முகர்ஜி, இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த எந்த தடையும் இல்லை என்றார்.
அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் எம்பி குருதாஸ் தாஸ்குப்தா, இதில் யார் சரி யார் சரியல்ல என்பதை இந்த நாடு முடிவு செய்யட்டும்.
அணு குண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் காலாவதியாகிவிடும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆனால், இதை நமது பாதுகாப்பு அமைச்சர் மறுக்கிறார்.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சொன்னதற்கு நமது அமைச்சரிடம் பதிலே இல்லை.
அமெரிக்கா கோபப்பட்டு விடுமோ என்று மத்திய அரசு அஞ்சி நடுங்க வேண்டிய அவசியம் என்ன.
இந்த விவகாரத்தில் பிரதமர், வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் தந்த விளக்கங்களால் சந்தேகங்கள் கூடியதே தவிர, குறையவே இல்லை என்றார்.
அடுத்துப் பேசிய சிபிஎம் எம்பி ரூப்சந்த் பால், தாஸ்குப்தா சொன்னது மிக மிக சரி. அமெரிக்காவின் பேச்சும் செயலும் இந்த விஷயத்தில் சந்தேகங்களை மேலும் அதிகரிக்கச் செய்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் ஒளிவு மறைவாக என்னென்ன உள்ளதோ தெரியவில்லை என்றார்.
பாஜகவோடு சேர்ந்து கொண்டு இடதுசாரிகளும் கிடுக்கிப்படி போட்டதால் காங்கிரஸ் எம்பிக்களும் அமைச்சர்களும் ந்த பதிலும் சொல்லாமல் நொந்து போய் அமர்ந்திருந்தனர்.
இதற்கிடையே இந்த ஒப்பந்தம் குறித்து 193ம் விதியின் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்ற சபாநாயகர், ஓட்டெடுப்பு இல்லாத விவாதம் நடத்த அனுமதியளித்தார்.
ஓட்டெடுப்பு நடத்தினால் இடதுசாரிகள் காலை வாரிவிட்டால் அதில் பாஜக கூட்டணியிடம் காங்கிரஸ் தோற்கும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மத்திய அரசுக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து கொடுத்து வரும் ஆதரவை திரும்ப பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் உயர் மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.
இதில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடப்படும் என்று தெரிகிறது.
கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் நிருபர்களிடம் பேசிய சிபிஎம் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத், ஹனிமூன் முடிந்துவிட்டது, அதற்காக உடனடியாக டைவர்ஸ் இருக்காது.. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்த திருமணம் நீடிக்கும் என்றார்.
பிரதமர் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால் மத்திய அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வது என்ற நிலையை இடதுசாரிகள் வெகு சீக்கிரத்திலேயே எடுப்பார்கள் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications