தென்காசி கொலைகள்-லஞ்சம் வாங்கிய போலீஸ்அதிகாரிகள்: இல.கணேசன் புகார்
தென்காசி:தென்காசியில் நடந்த கொலைகளை காவல்துறை நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும் என தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இந்து முன்னணித் தலைவர் குமார் பாண்டியன் கொலை செய்யப்பட்டதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக காரணமாக கடந்த 14ம் தேதி தென்காசியில் இரு பிரிவினர் நடுரோட்டில் அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர்.
![]() |
இதில் குமார் பாண்டியனின் தம்பிகள் சேகர், செந்தில், சுரேஷ் உள்பட 6 பேர் பலியாயினர்.
படுகொலை செய்யப்பட்ட பாண்டியனின் சகோதரர்கள் வீட்டிற்கு இன்று வந்த தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் குற்றாலத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில்,
தென்காசியில் நடந்த கொலைகளை காவல்துறை நினைத்திருந்தால் தவிர்த்திருக்க முடியும். இந்து சமுதாயத்தின் குரலாக இருந்த குமார் பாண்டியன் கொல்லப்பட்டார். அதே குடும்பத்தில் அவரது சகோதர்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். குடும்பத்தினருக்கு வேதனையோடு ஆறுதல் கூற வந்துள்ளேன். ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
![]() |
இது தனிப்பட்ட மோதல் என்று காவல்துறை தகவல்களை பரப்புகிறது. அது முற்றிலும் தவறு.
நடு ராத்திரியில் காவல்துறையினர் வீடுகளுக்குள் சென்று துன்புறுத்தி வருகின்றனர்.ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இருந்த அடக்கு முறை தன்மையோடும், மனநிலையோடும் காவல்துறை செயல்பட்டால் தீர்வு கிடைக்காது. 3 பேர் பலியான குடும்பத்தினரையே மீண்டும் போய் கைது செய்துள்ளனர். இது எந்த விதத்தில் நியாயம். அமைதி திரும்புவதற்கான வழியா என்று தெரியவில்லை.
காவல்துறையினரின் செயல்களால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். குறிப்பாக நெல்லை டி.ஐ.ஜி மிரட்டும் தொனியில் நடந்து கொள்கிறார். இது நல்லதல்ல. முந்தைய கொலையிலும், இப்போதைய கொலைகளிலும் தொடர்புடைய தூண்டிவிட்ட தொழிலதிபர் பாதுகாப்போடு இருக்கிறார்.
சில காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தொழிலதிபருக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். உயிருக்கு போராடிய செந்திலை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் தாமதமாக சென்றுள்ளது. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படாததால் அவர் இறந்தார். அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்.
மேலும் மிருகத்தனமாகவும், முரட்டுதனமாகவும் போலீசார் செயல்பட்டு வருவதற்கு லஞ்சம் பெற்ற சில காவல்துறை அதிகாரிகள் தான் காரணம் என்றார்.
இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பேட்டி:
முன்னதாக நேற்றிரவு பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக இந்து முன்னணி அமைப்பாளர் முருகானந்தம் கூறுகையில்,
இந்து சமுதாயத்திற்காக போராடி வீரமரணம் அடைந்த குமார் பாண்டியன் சகோதரர்களின் ஆத்மா சாந்தியடைய தமிழகம் முழுவதும் கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றப்படும். இங்கு நடைபெற்ற கொலை சம்பவங்களில் அரசு பராபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மதங்களை பார்க்காமல் பயங்கரவாதி என்ற கோணத்தில் மட்டும் காவல்துறையின் அணுகுமுறை அமைய வேண்டும்.
தென்காசியில் 40 ஆண்டு காலமாக மதக் கலவரம் இருந்து வருகிறது. ஆயுதங்களோடு காவல்நிலையம் சென்றவர்களை தடுத்திருக்க வேண்டாமா? இந்த அரசு முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. தென்காசி வட்டாரத்தில் மனித நீதி பாசறை, நஜ்ஜத் போன்ற அமைப்புகள் இளைஞர்களுக்கு பயிற்சியளித்து பயங்கரவாதத்தை துண்டுவதாக தெரிகிறது.
இதை உளவுத் துறை கண்காணிக்க வேண்டும். இந்த கொலை சம்பவம் ஏதோ தனிப்பட்ட விரோதமாக காவல்துறையும், அரசும் கூறி வருகின்றன. திறமையும் புகழும் வாய்ந்த தமிழக காவல்துறை தவறான பிரசாரத்தில் இறங்கி இழுக்கை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.
குமார் பாண்டியன் சகோதரர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன என்றார்.
6 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம்:
பலியான சேகர், செந்தில்,சுரேஷ் மற்றும் பஷீர், அசன் கனி, ஆட்டோ டிரைவர் நாகூர் மீரான் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 10,000 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.
தென்காசி கோட்டாட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காசோலைகளை கலெக்டர் பிரகாஷ் வழங்கினார்.அப்போது இறந்தவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.














Click it and Unblock the Notifications